அங்காரா, துருக்கி: வடமேற்கு துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லுக்கு கிழக்கே சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் போலு மாகாணத்தின் கொரோக்லு மலையில் பிரபல 12 மாடி கொண்ட ஸ்கை என்ற விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் நேற்று (ஜன.21) அதிகாலை திடீரென பற்றிய தீயால், 76 பேர் உயிரிழந்த நிலையில் 51 படுகாயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்துப் பேசிய துருக்கி உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா, “நேற்று (ஜன.21) அதிகாலை 3:27 மணிக்கு அங்காரா பகுதியில் உள்ள இந்த பிரபல விடுதியில் திடீரென தீ பற்றியது. இந்த விடுதியில் 238 பேர் இருந்துள்ளதாக விருந்தினர் பதிவில் குறிப்பிட்டுள்ளது. அதிகாலை 4:15 மணிக்கு மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டது.
விடுதியின் உணவகப் பிரிவிலிருந்து முதலில் தீ பரவியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ஆறு தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்த சம்பவத்தில் தொடர்புடைய 9 பேரைக் கைது செய்துள்ளோம். உயிரிழந்த 76 பேரில் 45 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த 45 பேரின் உடல் மட்டும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று இறுதிக் கட்ட மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளோம்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: அதிபர் ஆன டிரம்ப் முதலில் கையெழுத்திட்ட உத்தரவுகள்...ஆதரவாளர்களுக்கு மன்னிப்பு முதல் WFH முடிவு வரை!
இது குறித்துப் பேசிய விடுதியில் தங்கியிருந்தவர்களுள் ஒருவரான அட்டகன் யெல்கோவன், "பள்ளிகளுக்கு இரண்டு வாரக் குளிர்கால விடுமுறையின் காரணமாக விடுதி முழுவதும் நிரம்பி வழிந்தது. நான் எனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் 3வது மாடியில் தங்கியிருந்தேன். நாங்கள் நல்ல தூக்கத்திலிருந்தோம். அப்போது என் மனைவி தீ பற்றிய வாசனை அறிந்து விழித்து பார்த்தார். எந்த ஒரு எச்சரிக்கை ஒலியும் வரவில்லை. ஆனால் தீ பற்றி கொழுந்து விட்டு எரிந்தது.
இதையடுத்து, நாங்கள் உடனடியாக அங்கிருந்து தப்பிக்க நினைத்தோம். அதனால், மாடிக்குச் செல்ல நினைத்தோம். ஆனால், மாடியிலிருந்து தான் தீ பற்ற ஆரம்பித்தது. அதனால், உடனடியாக கீழே இறங்கி விடுதியிலிருந்து வெளியேறினோம். நாங்கள் கீழே இறங்கும் போது மேல் மாடியில் இருந்தவர் எப்படி கீழே இறங்குவது எனத் தெரியாமல் நின்றனர். சிலர் மாடியிலிருந்து கீழே குதித்தனர். அதில் இருவர் பலியானார்கள்.
மேலும், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுலா அமைச்சர் மெஹ்மத் நூரி எர்சோய், “இந்த விடுதி 2021 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் தீயணைப்பு எச்சரிக்கை குறித்து சோதனையில் அனைத்து வசதிகளும் இருந்தது” என்றார்.
துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில், “புதன்கிழமை தேசிய துக்க நாளாக அனுசரிக்கப்படும். அரசு கட்டடங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள துருக்கிய தூதரகங்களில் உள்ள அனைத்து கொடிகளும் அரைக் கம்பத்திற்கு இறக்கப்படும்” என்றார்