ஜார்ஜ்டவுன்:மூன்று நாடுகள் பயணமாக தென்அமெரிக்க நாடான கயானாவுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது, சீனாவின் எல்லை விரிவாக்க செயல்பாடுகள், உலக அமைதி மற்றும் ஒத்துழைப்பு குறித்து ஆகியவற்றை மையப்படுத்தி பேசினார்.
பிரதமர் பேசுகையில், "இன்று, பயங்கரவாதம், போதைப்பொருள், சைபர் கிரைம் போன்ற பல சவால்கள் உள்ளன. அவற்றை எதிர்த்துப் போராடுவதன் மூலம் மட்டுமே, நம் வரவிருக்கும் தலைமுறையின் எதிர்காலத்தை வடிவமைக்க முடியும். வெளியுறவுக் கொள்கை மற்றும் அணுகுமுறையில் இந்தியா சுயநலத்தோடு கையாண்டதில்லை. வளங்களை ஆக்கிரமித்தல், வளங்களைப் பிடுங்குதல் போன்ற உணர்விலிருந்து நாங்கள் எப்போதும் விலகி இருக்கிறோம். வளங்களை விரிவாக்கும் எண்ணம் எங்களுக்கு எப்போதுமே இருந்ததில்லை.
அது விண்வெளியாக இருந்தாலும் சரி, கடலாக இருந்தாலும் சரி, இவை உலகளாவிய மோதலுக்கு உட்பட்டதாக இருக்கக்கூடாது. ஒத்துழைப்பாக இருக்க வேண்டும். இது மோதல்களுக்கான நேரம் அல்ல; மோதலை உருவாக்கும் சூழ்நிலைகளைக் கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்கான நேரம். உலகளாவிய தெற்கின் விழிப்புணர்வுக்கான நேரம், உலகளாவிய தெற்கின் ஒன்றுபட்ட குரல் மிக முக்கியமானது. இந்த உணர்வோடு, இன்று இந்தியாவும் உலகளாவிய தெற்கின் குரலாக மாறியுள்ளது. உலக வளர்ச்சிக்கு இந்தியா எல்லா வகையிலும் ஆதரவாக நிற்கிறது.