துபாய்:மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மங்காப் நகரில் உள்ள கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வடஇந்தியர் இருவர் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் உயிரிழந்ததாக தகவல் கூறப்படுகிறது.
விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த அந்நாட்டு துணை பிரதமர் ஷேக் பஹத் யுசுப் சவுத் அல் சபா தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து உறுதிபடுத்தியுள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில் முறையான பாதுகாப்பு வசதிகளை கையாளததே தீ விபத்துக்கான காரணம் என குவைத் துணை பிரதமர் தெரிவித்துள்ளார்.
காலை 6 மணி அளவில் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு ஒட்டுமொத்த குடியிருப்பு வளாகத்திற்கும் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து பல்வேறு வாகனங்களில் விரைந்த தீயணைப்பு துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டடத்தில் தீ விபத்து காரணமாக ஏற்பட்ட புகைமூட்டத்தில் சிக்கி பலர் மூச்சுத்திணறி உயிரிழந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது000. கேரளாவைச் சேர்ந்த கே.ஜி. ஆபிரகாம் என்ற தொழிலதிபருக்கு சொந்தமான கட்டடத்தில் தான் இந்த விபத்து நேர்ந்ததாக தகவல் கூறப்படுகிறது. அந்த கட்டடத்தில் மலையாளிகள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.