அட்லாண்டா: அமெரிக்காவின் 39ஆவது அதிபராக பதவி வகித்த ஜிம்மி கார்டர் கடந்த ஒரு ஆண்டாகவே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள பிளைன்ஸ் பகுதியில் காலமானதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
வியட்நாம் போர், வாட்டர் கேட் ஊழல் என அமெரிக்காவுக்கு பின்னடைவு நேரிட்டிருந்த சமயத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு வெள்ளை மாளிகைக்குள் குடியேறியவர் ஜிம்மி கார்டர். 39 ஆவது அதிபராக இருந்த அவர், 29ஆம் தேதி பிற்பகல் உயிரிழந்ததாக கார்டரின் அதிகாரப்பூர்வ மையம் தெரிவித்துள்ளது. ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள பிளைன்ஸ் பகுதியில் உள்ள வீட்டில் அவர் காலமானார். முதுமை காரணமாக கடந்த ஒரு ஆண்டாக வீட்டிலேயே அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பரில் ஜிம்மி கார்டரின் மனைவி ரோசாலின் மறைந்தார். அமைதியான சூழலில் குடும்பத்தினர் சூழ்ந்திருக்க ஜிம்மி கார்டர் காலமானதாக கார்டரின் மையம் தெரிவித்துள்ளது.
ஜிம்மி கார்டர் மறைவை அடுத்து உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "உலகின் அசாதாரண தலைவராக, அரசியல்வாதியாகவும், மனிதாபிமானவாதியாகவும் திகழ்ந்தவர். மிகவும் உற்ற நண்பரான அவரை இழந்து விட்டேன்.இரக்க சிந்தனை கொண்டவராக தார்மீக ரீதியாக திகழ்ந்தவர்.
இதையும் படிங்க: 'திருக்குறளின் துணைக் கொண்டு எதேச்சதிகாரத்தை வெல்வோம்'- திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!
நோய் ஒழிப்பு, அமைதியை உருவாக்குதல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல், நியாயமான நேர்மையான முறையில் தேர்தல் நடத்துதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரணாகவும், அடுத்தவர்களுக்கு உதாரணமாகவும் திகழ்ந்தவர். இந்த நாட்டின் இளைஞர்களும் வாழ்க்கையை எப்படி வாழ்வது, அதன் நோக்கம் என்ற என்ற தேடுதல் கொண்ட யார் ஒருவரும் கொள்கைகள், நம்பிக்கைகள், மனித நேயம் மிக்கவராக திகழ்ந்த ஜிம்மி கார்டரின் வாழ்க்கையை பாடமாக கொள்ள வேண்டும்,"என்று கூறியுள்ளார்.
எகிப்து அதிபர் அன்வர் சாதாத், இஸ்ரேல் பிரதமர் மீனாசென் பெகின் ஆகியோருடன் கடந்த 1978ஆம் ஆண்டு 13 நாட்கள் அமெரிக்காவின் கேம்ப் டேவிட் எனும் பகுதியில் உள்ள பரந்த அளவு பரப்பளவிலான ஒரு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்தி மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தி சாதனை புரிந்தார்.
அதிபர் பதவியில் இருந்து விலகிய பின்னர் ஜிம்மி கார்டரும், அவரது மனைவி ரோசாலினும் இணைந்து கார்டர் சென்டர் என்ற மையத்தை உருவாக்கினர். அடுத்த நாற்பது ஆண்டுகள் உலகம் முழுவதும் பல்வேறு பிரச்னைகளை தீர்த்து வைத்து அமைதி தூதுதவராக, மனித உரிமைகளை காப்பவராக ஜிம்மி கார்டர் திகழ்ந்தார். இதற்காக 2002ஆம் ஆண்டு ஜிம்மி கார்டர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.