தஞ்சாவூர்: ஆங்கில புத்தாண்டை உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆட்டம், பாட்டம் என உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள மக்கள் அதிகாலையிலேயே கோயில், தேவாலயம் உள்ளிட்டவற்றுக்குச் சென்று வழிபாடு செய்தும் வருகின்றனர். அதனால், கோயில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
அந்த வகையில் உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் பொதுமக்கள், பக்தர்கள் ஏராளமானோர் தங்கள் குடும்பத்தினருடன் வந்து, பெரிய கோயிலில் உள்ள பெரிய நாயகி அம்மன், வாராஹி அம்மன் உள்ளிட்ட சாமிகளை தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல், பிரசித்தி பெற்ற கோடியம்மன் ஆலயத்தில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அப்போது, பருவ மழை பொழிந்து விவசாயம் செழிக்க வேண்டுமென வேண்டிக் கொண்டு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து செல்கின்றனர். தற்போது, பள்ளி விடுமுறை என்பதாலும், ஐயப்ப பக்தர்கள் மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர் கோயிலுக்கு வந்து செல்வதால், தஞ்சை பெரிய கோயில் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
தற்போது, இதுகுறித்து கோவையைச் சேர்ந்த சியாமளா என்பவர் கூறும்போது, "ஆண்டு தோறும் இக்கோயிலுக்கு வருவதாகவும், சாமி தரிசனம் செய்வது மிகுந்த மன நிறைவை அளிப்பதாகவும், வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி கொண்டாடுவது இக்கோயிலின் சிறப்பு அம்சமாகும்" எனவும் தெரிவித்துள்ளார்.
வேலூர் வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் பக்தர்கள் தரிசனம்:
அதேபோல், வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் அமைந்துள்ள அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோயிலில், புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே சாமி தரிசனம் செய்தனர். இதில், ஆறுமுகசாமி சமேத வள்ளி தெய்வானைக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு, சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனைகள் நடந்தது.
வண்ண மலர்களால் பெருமாள் கோலமிட்டு வழிபாடு:
மேலும், வேலூரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் ஆலயத்தில் புத்தாண்டு துவக்கத்தை முன்னிட்டு, பெருமாளுக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. இதற்காக, அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர்.
மேலும், புத்தாண்டை வரவேற்கும் விதமாக வண்ண மலர்கள் நவதானியங்களைக் கொண்டு பெருமாள் கோலமிட்டு வழிபாடுகள் செய்தனர். இதேபோன்று, கோட்டையில் உள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் ஜலகண்டீஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு தங்கக்கவசம் அணிவித்து மகாதீபாராதணை நடைபெற்றது.
திருநெல்வேலியில் புத்தாண்டு கோலாகலமாகக் கொண்டாட்டம்:
தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் 2025 புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நெல்லையிலும் மக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். இதற்கிடையே, கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
அந்த வகையில், நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் பேராலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில், பாளையங்கோட்டை மறை மாவட்ட பேராயர் அந்தோணி சாமி சவரிமுத்து கலந்து கொண்டு திருப்பலி நடத்தி நற்செய்தி மற்றும் புத்தாண்டு செய்திகளை வழங்கினார். இதுபோன்று கத்தீட்ரல் பேராலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
அதேபோல், நெல்லையப்பர் திருக்கோயிலும் அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு புத்தாண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். அப்போது, மாநகரம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.