வாஷிங்டன்: புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்கும் முன்பு, ரஷ்யாவுக்கு எதிராக போரிடும் உக்ரைனுக்கு 2.5 பில்லியன் டாலர் நிதி வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 30ஆம் தேதியன்று தெரிவித்துள்ளார்.
இந்த நிதி உதவித் திட்டத்தில் அமெரிக்காவின் டிராடவுன் ஆணையத்தின் சார்பில் 1.25 பில்லியன் டாலர் நிதி உதவியும் அடங்கும். அமெரிக்க பாதுகாப்புத்துறையின் கிடங்கில் இருந்து வெடிமருந்துகள் மற்றும் ஏவுகணைகள் போன்ற பாதுகாப்பு பொருட்களை வெளிநாடுகளுக்கு வழங்குவதற்கு இந்த ஆணையம் அனுமதி அளிக்கிறது. மேலும் நீண்டகால ஆயுத திட்டத்தின் கீழ் 1.22 பில்லியன் டாலர் நிதி உதவியும் வழங்கப்பட உள்ளது. இது உக்ரைன் பாதுகாப்பு உதவி முயற்சி என்ற ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
இது குறித்து கூறியுள்ள பைடன், "நீண்டகால ஆயுதத் திட்டத்தின் கீழ் உக்ரைன் பாதுகாப்பு உதவி முயற்சியின் அனைத்து நிதி உதவிகளும் இப்போது செலவழிக்கப்பட்டுள்ளது. தாம் அதிபர் பதவியை விட்டு விலகும் முன்பு மீதம் உள்ள டிராடவுன் நிதியையும் செலவிடப்படும். எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் உக்ரைனுக்கு அதிக உதவிகளை தொடர்ந்து வழங்க வேண்டும் என நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருக்கின்றேன்.
என்னுடைய உத்தரவின்படி மீதமுள்ள என்னுடைய பதவி காலத்தில் உக்ரைன் நிலையை வலுப்படுத்தும் வகையில் அமெரிக்கா இடைவிடாமல் தொடர்ந்து பணியாற்றும்,"என்று கூறியுள்ளார். ஆயுத உதவி தவிர, அமெரிக்காவின் சார்பில் உக்ரைனுக்கு 3.4 பில்லியன் டாலர் பொருளாதார உதவியும் அளிக்கும். ரஷ்யாவுக்கு எதிரான போரில் முக்கியத்துவம் வாய்ந்த அரசு துறை சேவைகளுக்கு உக்ரைன் நிதி அளிக்கவும் இந்த நிதி வழங்கப்படும் என கரூவூலத்துறை அமைச்சர் ஜேனட் யெலன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஞானசேகர் மீது 20 வழக்குகள் நிலுவையில் இருந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?-தேசிய மகளிர் ஆணையம் கேள்வி
அமெரிக்காவின் பொருளாதார நிதி உதவியின் மூலம் உக்ரைனின் அரசு ஊழியர்கள், பள்ளி ஊழியர்கள், சுகாதார நல ஊழியர்கள், போரில் முண்ணனியில் இருப்போர் ஆகியோருக்கு சம்பளம் அளிக்க முடியும். அண்மை காலமாக உக்ரைனின் மின் கட்டமைப்புகள் மீது ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. எனினும் இதற்கு ஏகவுகணைகள், ட்ரோன்கள் மூலம் பதிலடி தரப்பட்டதாக உக்ரைன் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி அளிக்கிறது.
ரஷ்யாவின் எல்லை பிராந்தியத்தில் உள்ள குர்ஸ்க் பகுதியை சுற்றி ரஷ்யா-உக்ரைன் படைகள் மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த பகுதியை உக்ரைன் ஏற்கனவே கைப்பற்றி உள்ள நிலையில் அதனை மீட்பதற்கு வடகொரிய படைகளை ரஷ்யா அந்தப் பகுதிக்கு அனுப்பி உள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் வரும் 20ஆம் தேதி பதவி ஏற்கும் முன்பாக, உக்ரைன் பலம் பொருந்தியதாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வழி வகுக்கும் வகையில் ஆயுத உதவியை பைடன் நிர்வாகம் வழங்குகிறது. அதிபராக பதவி ஏற்க உள்ள டிரம்ப், உக்ரைன்-ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தையின் மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். இதனை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் வரவேற்றுள்ளார்.
டிரம்ப் மேற்கொள்ளும் இந்த முயற்சியானது உக்ரைனுக்கு பாதகமான அம்சங்களை ஏற்படுத்தும் என பல்வேறு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கூறியுள்ளனர். மேலும், அமெரிக்க நாடாளுமன்றம் அனுமதி அளித்த ஆயுதங்களுக்கான அனைத்து நிதி உதவிகளையும் உக்ரைனுக்கு தரக்கூடாது என்றும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தற்போதைய ஆயுத திட்டத்தின் படி கையிருப்பில் இருக்கும் ஆயுதங்களுக்குப் பதில், எதிரிகளை தாக்கும் ஆளில்லா வான்வழி அமைப்புகள், வெடிமருந்துகள், வான் பாதுகாப்பு வெடிமருந்துகள், ராக்கெட் அமைப்புகளுக்கான வெடிமருந்துகள், 155 மிமீ மற்றும் 105 மிமீ பீரங்கி வெடிமருந்துகள், கவச எதிர்ப்பு ஆயுதங்கள், குழாய் ஏவுகணைகள், துண்டு துண்டான கையெறி குண்டுகள் மற்றும் பிற பொருட்கள் மற்றும் உதிரி பாகங்கள் ஆகியவை புதியதாக வழங்கப்படுகின்றன. இப்போதைய நிதி உதவியையும் சேர்த்து ரஷ்யாவுக்கு எதிரான போர் தொடங்கிய 2022ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் அமெரிக்கா இதுவரை 65 பில்லியன் டாலர் நிதி உதவியை உக்ரைனுக்கு அளித்துள்ளது.