வாஷிங்டன்:அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், அந்நாட்டு அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிட தேவையான கட்சி பிரதிநிதிகளின் ஆதரவை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்சியில் நடந்த முதல் வாக்கெடுப்பில், அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தேவையான ஆயிரத்து 976 பிரதிநிதிகளின் ஆதரவை கமலா ஹாரீஸ் பெற்றதாக சொல்லப்படுகிறது.
நவம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளராக டொனால்டு ட்ரம்ப் களம் காணுகிறார். அவருக்கு எதிராக ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேநேரம் டிரம்ப்புடன் ஒப்பிடுகையில் பைடனின் செல்வாக்கு சரிந்து வந்த நிலையில் கட்சி வட்டாரங்கள் மற்றும் கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
கடும் எதிர்ப்பினைத் தொடர்ந்து அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக பைடன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஜனநாயக கட்சியின் வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட வாய்ப்பு அதிகரித்தது. அதிபர் ஜோ பைடன் தனது ஆதரவை கமலா ஹாரிஸுக்கு தெரிவித்த பின் கூடுதல் ஆதரவுகள் கிடைக்கத் தொடங்கின.