வாஷிங்டன் டிசி(அமெரிக்கா):இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியா? என்ற கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காமல் ஜனநாயக் கட்சி அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தவிர்த்துள்ளார்.
அமெரிக்காவின் துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் அதிபர் பதவிக்கு ஜனநாய கட்சியின் வேட்பாளராக களத்தில் உள்ளார். அவரிடம் சிபிஎஸ் தொலைகாட்சி சார்பில் அண்மையில் ஒரு மணி நேர பேட்டி பதிவு செய்யப்பட்டது. அந்த பேட்டி நேற்று வெளியானது.
அப்போது இஸ்ரேல் விவகாரம் குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதிலில், "மத்திய கிழக்கில் உள்ள அரபு நாடுகள் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது. அந்த பிராந்தியத்தில் இஸ்ரேலுடன் பல்வேறு நகர்வுகள் முன்னெடுக்கப்படுவதற்கு நாங்கள் பணியாற்றி உள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:அமெரிக்க அதிபர் தேர்தல்: ட்ரம்ப், கமலா ஹாரிஸ் யார் வென்றால் இந்தியாவுக்கு நல்லது? வல்லுநர்கள் கருத்து!
"நெதன்யாகு அமெரிக்காவுக்கு உண்மையிலேயே நெருக்கமான கூட்டாளியா?" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு நேரடியாக பதில் அளிப்பதை தவிர்த்த கமலா ஹாரிஸ், "உங்கள் கேள்வி அப்படி இருந்திருக்கூடாது. அமெரிக்க மக்கள்-இஸ்ரேல் மக்கள் இடையே முக்கியமான கூட்டணி உள்ளதா என்று நீங்கள் கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்படி நீங்கள் கேள்வி கேட்டால் அதற்கு என்னுடைய பதில் ஆம் என்பதாக இருக்கும்," என்று சொல்லி இருக்கிறார்.
அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆண்டுக்கு 3.8 பில்லியன் டாலர் ராணுவ உதவியை வழங்கி வருகிறது. ஹமாஸ் உடனான இஸ்ரேல் போர் தொடங்கிய கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் அந்நாட்டுக்கு 14 பில்லியன் டாலர் மதிப்புள்ள கூடுதல் நிதிக்கு அமெரிக்க அதிபர் பைடன் அனுமதி அளித்துள்ளார்.