ஜெருசலேம் : ஈரான் ஏவிய 300க்கும் மேற்பட்ட ட்ரோன்களில் 99 சதவீதம் இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரான் தூதரகம் சேதமடைந்தது. இதில் ஈரானிய அதிகாரிகள் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்து இருந்தது. எந்த நேரத்திலும் இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படலாம் என்ற அச்சம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே நிலவியது. இந்நிலையில், இஸ்ரேல் மீது ட்ரோன் உள்ளிட்ட ஏவுகணைகளை ஈரான் ஏவியது.
170 ட்ரோன், 30க்கும் மேற்பட்ட க்ரூஸ் வகை ஏவுகணைகள், 120க்கும் மேற்பட்ட கண்டம் தாண்டி இலக்கை அழிக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் ஏவியதாக கூறப்படுகிறது. ஈரான் அனுப்பிய ஏவுகணைகளில் 99 சதவீதத்தை தங்களது வான் பாதுகாப்பு சாதனத்தின் மூலம் இடைமறித்து தாக்கி அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.
மற்ற சில ஏவுகணைகள் விழுந்து வெடித்து சிதறியதில் சில இடங்களில் லேசான சேதாரங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இஸ்ரேல், ஈரான் இடையே நேரடி போர் ஏற்படும் சூழல் நிலவி வருவதால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. மேலும் ஈரானின் தாக்குதலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜோ பைடன் கூறுகையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். அமெரிக்காவின் உதவியால் ஈரானின் ட்ரோன்கள், ஏவுகணைகளை இஸ்ரேல் வீழ்த்தியது. இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அமெரிக்காவின் இரும்புக்கவச பாதுகாப்பை உறுதிப்படுத்த நெதன்யாகுவுடன் பேசினேன்.