வாஷிங்டன்: அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்த முயன்றதாக இந்திய இளைஞருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்தவர் சாய் வர்ஷித் கந்துலா. 20 வயதான இவர் அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை பெற்று மிசோரியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், சாய் வர்ஷித் கடந்த 2023 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி மதியம் மிசோரியில் இருந்து வாஷிங்டன்னுக்கு விமானம் மூலம் வந்துள்ளார். பின்னர் அங்கு ஒரு டிரக்கை வாடகைக்கு எடுத்தவர், அதனை ஒட்டிக்கொண்டு அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையை நோக்கி சென்றுள்ளார்.
சுமார் 9:35 மணிக்கு வெள்ளை மாளிகை அருகேயுள்ள நடைபாதையில் தாறுமாறாக டிரக்கை இயக்கி பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளார். மேலும், வெள்ளை மாளிகை தடுப்பு சுவற்றில் வண்டியை மோதியுள்ளார். இதனால் சுவர் பலத்த சேதமடைந்துள்ளது. பின்னர் மீண்டும் சுவற்றில் மோதிய போது அந்த டிரக் பழுதாகி நின்றுள்ளது.
வாகனத்தை விட்டு கீழே இறங்கிய சாய் வர்ஷித் பேகில் இருந்து நாஜி ஜெர்மனியின் சர்வாதிகாரத்தை குறிக்கும் கொடியை வெள்ளை மாளிகையை நோக்கி காண்பித்து அமெரிக்க அரசுக்கு எதிராக கோஷமிட்டுள்ளார். உடனே அங்கிருந்த போலீசார் மற்றும் அதிபருக்கு பாதுகாப்பு வழங்கும் சீக்ரெட் ஏஜென்சியினர் சாய் வர்ஷித்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதையும் படிங்க: வங்கதேசத்துடன் நெருக்கம் காட்டும் பாகிஸ்தான் கவலை கொள்ளும் இந்தியா
பின்னர் போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரித்தபோது, '' மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க ஆட்சியை அகற்றிவிட்டு நாஜி ஜெர்மனியின் சர்வாதிகார ஆட்சியை அமைக்க விரும்புவதாகவும், மேலும் தனக்கு ஒரு பதவியை வழங்க வேண்டும்'' என்றும் சாய் வர்ஷித் கூறியுள்ளார். மேலும், தனது லட்சியத்தை அடைய தேவைப்பட்டால் அதிபரை கொல்லவும் ஏற்பாடு செய்திருப்பேன்'' என கூறி போலீசாரை அதிர வைத்துள்ளார்.
இந்த வழக்கு அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், சாய் வர்ஷித் மீதான குற்றசாட்டுகள் நிரூபணம் ஆகியுள்ளது. வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்த முயன்றது, அரசு சொத்துக்களை சேதப்படுத்தியது, பொதுமக்களை அச்சுறுத்தியது உள்ளிட்ட குற்றசாட்டுகள் நிரூபணமாகி சாய் வர்ஷித்திற்கு நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.