துபாய்:ஈரான் கடந்த ஒன்றாம் தேதி தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இப்போது அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் 1200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 250 பேர் பிணைய கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதற்கு பதிலடியாக காசா பகுதியில் உள்ள ஹமாஸ் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. ஈரானின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்றிருந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேஹ் கடந்த ஜூலை 31ஆம் தேதி டெஹ்ரான் நகரில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு இஸ்ரேல்தான் காரணம் என்று ஈரான் பகிரங்கமாக குற்றம் சாட்டியது.
இதனால், இஸ்ரேல் மீது ஈரான் கடந்த ஒன்றாம் தேதி தாக்குதல் நடத்தியது. எனவே எப்போது வேண்டுமானாலும் ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் கூறி வந்தது. இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவம் ஈரான் மீது ஏகவுகனை தாக்குதலில் ஈடுபட்டது.
தெஹ்ரான் நகரில் வசிக்கும் மக்களில் ஒருவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஏழு குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டது,"என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் சிரியாவின் அரசு செய்தி நிறுவனமான சானா வெளியிட்டுள்ள செய்தியில் சிரியாவின் கோலான் பகுதியில் இருந்து ஈரானை நோக்கி ஏவப்பட்ட ஏவுகனைகள் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்கின,"என்று கூறியுள்ளது.