தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஹிஸ்புல்லா இயக்கத்துடன் போர் நிறுத்த ஒப்பந்தம்...விதியை மீறி தாக்கினால் பதிலடி தரப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை! - ISRAEL AND LEBANON

லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்துடன் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் ஹிஸ்புல்லா இயக்கத்துக்கு எதிரான 14 மாத போர் முடிவுக்கு வருகிறது.

பெய்ரூட் நகரில் இஸ்ரேல் கடைசி கட்ட தாக்குதல்
பெய்ரூட் நகரில் இஸ்ரேல் கடைசி கட்ட தாக்குதல் (Image credits-AP)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2024, 12:49 PM IST

ஜெருசலேம்:லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்துடன் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் ஹிஸ்புல்லா இயக்கத்துக்கு எதிரான 14 மாத போர் முடிவுக்கு வருகிறது.

இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் புதன் கிழமை உள்ளூர் நேரப்படி காலை 4 மணிக்கு தொடங்கியது. அதே நேரத்தில் இந்த போர் நிறுத்தம் என்பது காசாவில் ஹமாஸ் உடனான இஸ்ரேல் மோதலுக்கு பொருந்தாது. ஹமாஸ் இயக்கத்தினர் பலரை பிணை கைதிகளாகப் பிடித்து வைத்திருக்கின்றனர்.

கடைசி கட்ட தாக்குதல்:ஹிஸ்புல்லா இயக்கத்துடனான போர் நிறுத்தம் அமலுக்கு வருவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு இஸ்ரேல் பெய்ரூட் நகர் மீது கடும் ஏவுகனை தாக்குதலை நடத்தியது. அந்தப் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறும்படியும் இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்தது. போர் நிறுத்தம் அமலுக்கு வரும் முன்பு லெபனான் முழுவதும் நடைபெற்ற தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட பினனரும் கூட பெய்ரூட் நகரில் பெரும் அளவிலான வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் காரணமாக உறவினர்களுடன் நகரின் கடலோர நடைபாதைக்கு தப்பி சென்ற அஹ்மத் கதீப்,"போர் நிறுத்தத்துக்கு முன்பு கடைசி கட்ட தாக்குதல் பயங்கரமாக இருக்கிறது," என்று கூறினார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஹிஸ்புல்லா இயக்கத்தினர் தாக்குதல் நடத்தும் பட்சத்தில் இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தலாமா என்பதில் நீண்ட கருத்து வேறுபாடு நிலவுகிறது. இந்த அம்சம் ஒப்பந்தத்தில் இடம் பெற வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். ஆனால், இதனை லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

அமெரிக்கா வரவேற்பு:அமெரிக்கா-பிரான்ஸ் நாடுகளின் பேச்சுவார்த்தையின் விளைவாக மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தத்தை இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவையில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தாக்கல் செய்தார். அதற்கு அவரது அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனிடையே வாஷிங்டன்னில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "இந்த ஒப்பந்தம் ஒரு நல்ல செய்தி. இதே போல காசாவிலும் போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தும்," என்றார்.

இதையும் படிங்க:திருச்சிக்கு படையெடுக்கும் வெளிநாட்டு பறவைகள்.. மினி வேடந்தாங்கலாக உருவெடுக்கும் கிளியூர் ஏரி!

முன்னதாக தொலைகாட்சி வழியே உரையாற்றிய நெதன்யாகு, பிராந்தியம் முழுவதும் இஸ்ரேல் எதிரிகளுக்கு எதிராக இதுவரை மேற்கொள்ளப்பட்ட சாதனைகளை பட்டியலிட்டார். "ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்தம் ஒப்பந்தம் மேற்கொண்டதன் மூலம் ஹமாஸ் இயக்கத்தை மேலும் தனிமைப்படுத்த முடியும். மேலும் முக்கிய எதிரியான ஈரான் மீது கவனம் செலுத்த முடியும். ஹிஸ்புல்லா ஒப்பந்தத்தை மீறி தாக்கினால், நாங்களும் தாக்குவோம்," என்று கூறியுள்ளார்.

13 மாதத்தில் 3760 பேர் பலி:இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது ஆரம்ப கட்டத்தில் இரண்டு மாதகாலம் அமலில் இருக்கும். ஒப்பந்தத்தின் படி லெபனானின் தெற்கு பகுதியில் இருந்து ஹிஸ்புல்லா இயக்கத்தினர் விலகிக் கொள்ள வேண்டும். அதே போல இஸ்ரேல் படையினரும் தங்கள் நாட்டு எல்லைக்கு திரும்புவார்கள். ஆயிரகணக்கான லெபனான் படைகள், ஐநா அமைதிபடை வீரர்கள் லெபனானின் தெற்கு பகுதியில் நிறுத்தப்படுவார்கள்.போர் நிறுத்தம் அமலில் உள்ளதா? என்பதை அமெரிக்கா தலைமையிலான சர்வதேச குழு கண்காணிக்கும்.

லெபனானில் கடந்த 13 மாதத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3760 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2000த்துக்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா இயக்கத்தினரை கொன்றிருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது. லெபனானின் மீது நடைபெற்ற தாக்குதல் காரணமாக 12 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details