இஸ்லாமாபாத்:இம்ரான் கானை விடுவிக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் கோரிக்கைகள் எழுந்த நிலையில் பாகிஸ்தான் அரசு அவரது கட்சியுடன் கடந்த 23ஆம் தேதி முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது.
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்(பிடிஐ) கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடந்த 2023ஆம் ஆண்டு இஸ்லாமாபாத், ராவல்பிண்டி நகரங்களில் இருந்த ராணுவ அலுவலகங்கள், ஜின்னா ஹவுஸ் உள்ளிட்ட முக்கியமான கடடங்கள் மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்தினர். இந்த வழக்கில் கடந்த 2023ஆம்ஆண்டு இம்ரான் கான் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக இம்ரான் கான் மீது மட்டும் ஊழல், பரிசு பொருட்களை விற்றது உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளை பாகிஸ்தான் அரசு தொடுத்துள்ளது. இதில் ஒரு சில வழக்குகளில் மட்டும் இம்ரான் கான் ஜாமீன் பெற்றுள்ளார். எனினும் இன்னும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரால் சிறையில் இருந்து வெளியே வர இயலவில்லை. இம்ரான்கானை விடுவிக்கும்படி கடந்த நவம்பர் 26ஆம் தேதி பிடிஐ கட்சியினர் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரமாண்ட பேரணி நடத்தினர். இந்த பேரணியில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவரது பிடிஐ கட்சியின் தொழில்நுட்ப அணியினர் ரீலீஸ் இம்ரான்கான் என்ற ஹேஸ்டேக்கை சர்வதேச அளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர். இதனால் சர்வதேச அளவில் இம்ரான்கானை விடுவிக்க வேண்டும் என்று அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. மேலும் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்க உள்ளதாகவும் இம்ரான்கான் அறிவித்தார்.
இதையும் படிங்க:"தக்க பதிலடி கொடுப்போம்"-பாகிஸ்தானுக்கு ஆப்கான் தாலிபான்கள் எச்சரிக்கை!
மேலும் கடந்த 19ஆம் தேதி இம்ரான் கான் வெளியிட்ட அறிவிப்பில், “வெளிநாடுகளில் உள்ள பாகிஸ்தானியர்களுக்கு பாகிஸ்தானின் நிலைமை தெளிவாகத் தெரிகிறது, ஜனநாயகம், நீதித்துறை மற்றும் ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளன, அடக்குமுறை மற்றும் பாசிசத்தின் ஆட்சி நடைபெறுகிறது. எனவே, வெளிநாடுகளில் உள்ள பாகிஸ்தானியர்கள் தாய் நாட்டுக்கு பணம் அனுப்புதை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்,”என்று கூறினார்.
இது பாகிஸ்தான் அரசிடம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அப்படி நடந்தால் பாகிஸ்தான் பொருளாதாரம் பாதிக்கப்படக் கூடும் அபாயம் எழுந்தது. இதையடுத்து பிடிஐ கட்சியினருடன் பேச்சுவார்ததை நடத்த பாகிஸ்தான் அரசு ஒரு குழுவை அமைத்தது. தேசிய அவையின் சபாநாயகர் அயாஸ் சாதிக் முன்னிலையில் பிடிஐ கட்சியின் குழுவினருடன் கடந்த 23ஆம் தேதி முதல் கட்டப்பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையின் மூலம் ஆளும் கட்சிக்கும், இம்ரான் கட்சிக்கும் இடையேயான மோதல் போக்கு முடிவுக்கு வந்து அரசியல் பதற்றம் குறையும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் இம்ரான் கான் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கட்சியின் பேச்சுவார்த்தை குழு ஒரு நல்ல விஷயமாகும். பேச்சுவார்த்தையின் செயல்பாடுகள் அர்த்தம் கொண்டதாக இருக்கும். மேலும், எனது கட்சியின் பேச்சுவார்த்தை குழுவை சந்தித்து பேச உள்ளேன். அப்போதுதான் பேச்சுவார்த்தை குறித்த விஷயங்களில் முழுமையான புரிதலுக்கு வர முடியும்,"என்று கூறியுள்ளார்.
அரசுக்கும் இம்ரான் கான் கட்சிக்கும் இடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை வரும் ஜனவரி 2ஆம் தேதி நடைபெற உள்ளது. அப்போது இம்ரான் கான் உள்ளிட்டோரை விடுவிப்பது குறித்து வலியுறுத்தப்பட உள்ளது. சர்வதேச அழுத்தங்கள் காரணமாக இம்ரான் கானை விடுவிப்பது குறித்து பாகிஸ்தான் அரசு இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.