விஸ்கான்சின்: நடப்பாண்டின் நவம்பர் மாதம் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். இந்நிலையில், கடந்த வாரம் பென்சிலிவேனியாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காது பக்கத்தில் காயம் ஏற்பட்டு டிரம்ப் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். துப்பாக்கிச் சூடு நடத்திய 20 வயது மேத்யூ க்ரூக்ஸ் என்ற இளைஞரை துப்பாக்கிச் சூடு நடத்தி பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அதன்பின் விஸ்கான்சின் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்ட நிகழ்வில் டிரம்ப் கலந்து கொண்டார்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பின் முதல் முறையாக பொது மேடையில் டிரம்பை கண்டது கூட்டத்தில் குழுமியிருந்த மக்கள் டிரம்ப், அமெரிக்கா என கத்தி கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து பேசிய அவர், அமெரிக்காவின் பாதி பகுதியில் வெற்றி கிடைக்காததால், கடந்த முறை தோல்வியுற்றேன் என்றும் இந்த முறை முழு அமெரிக்காவிற்கும் அதிபராக தான் போட்டியிடுவதாகவும் கூறினார்.
இன்னும் 4 மாதங்களில் நம்ப முடியாத வெற்றியைப் பெறுவோம் என்றும் அனைத்து மதங்கள், மக்கள் மற்றும் சமயத்தினருக்கு அமைதி மற்றும் செழிப்புக்கான புதிய சகாப்தத்தை தொடங்குவோம் என்றும் கூறினார். தான் அமெரிக்கா முழுவதற்கும் அதிபராக இருப்பேன் என்றும் அமெரிக்காவின் பாதிக்கு அல்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்காக பணியாற்றுவேன் என்றார்.