டெய்ர் அல்-பலாஹ்(காசா):காசாவின் மத்திய பகுதியில் உள்ள டெய்ர் அல்-பலாஹ் நகரில் பசியால் தவித்த பாலஸ்தீனர்கள் பேக்கரி ஒன்றில் ரொட்டி வாங்க முட்டி மோதியதில் நெரிசலில் சிக்கி இரண்டு குழந்தைகள், 50 வயது பெண் ஒருவரும் உயிரிழந்த சோகம் நேரிட்டிருக்கிறது.
இஸ்ரேலுக்கும் காசாவில் உள்ள ஹமாஸ் படையினருக்கும் இடையே 14 மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. போரால் பாதிக்கப்பட்டுள்ள காசாவுக்குள் இஸ்ரேல் ராணுவத்தின் அனுமதியுடன்தான் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனுப்பப்படுகின்றன. அதிலும் கடந்த இரண்டு மாதங்களாக காசாவுக்குள் உணவுப் பொருட்கள் அனுப்பப்படுவது பெரும்பாலும் குறைந்து விட்டது. காசா மக்கள் மத்தியில் பசி மற்றும் நம்பிக்கையின்மை அதிகரித்து உள்ளதாக உதவி அமைப்புகளும் ஐநாவும் தெரிவித்துள்ளன. எனவே மனிதாபிமான உதவிகளை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
பிரட் பாக்கெட்17 டாலர்:இது குறித்து பேசிய அல்-அக்ஸா மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர், "டெய்ர் அல்-பலாஹ் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் ரொட்டி வாங்குவதற்காக ஏராளமானோர் குவிந்தனர். அப்போது நேரிட்ட நெரிசலில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ரொட்டி தயாரிப்பதற்கான மாவு உள்ளிட்ட மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக பல நாட்களாக பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன. எனவே திறந்திருந்த ஒரு பேக்கரியில் மக்கள் முண்டியடித்துக் கொண்டு பிரட்கள் வாங்க முயன்றனர். ஒரு பிரட் பாக்கெட் என்பது கறுப்பு சந்தையில் 17 டாலருக்கு விற்கப்படுகிறது," என்றார்.
காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனர்கள் பெரும்பாலும் பேக்கரிகள் மற்றும் உதவி அளிக்கும் உணவகங்களை நம்பி உள்ளனர். பெரும்பாலான பாலஸ்தீனர்கள் நாள் ஒன்றுக்கு ஒருமுறை மட்டுமே உண்பதற்கு உணவு கிடைக்கிறது. பிரட் வாங்கச் சென்று நெரிசலில் உயிரிழந்த சிறுமியின் தந்தை ஒசாமா அபு லாபான் மருததுவமனைக்கு வெளியே கதறியபடி நின்றிருந்தது சோகத்தை ஏற்படுத்தியது. "என் மகள் நெரிசலில் சிக்கி உயிரிழந்ததை கேள்விப்பட்ட என் மனைவி மயங்கி விழுந்து விட்டார்," என்று கூறினார். ஏறகனவே போர் காரணமாக தமது மகன், தந்தை, உறவினர்களை அவர் இழந்துவிட்டார்.
இதையும் படிங்க:கடலுக்குச் சென்ற 6 மீனவர்கள் மாயம்; தேடும் பணியில் இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் தீவிரம்!