லாஸ் ஏஞ்செல்ஸ்:அமெரிக்க முன்னாள் அதிபரும் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப்புடன் - உலக பணக்காரர்களில் ஒருவரும் எக்ஸ் வலைதளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் நேர்காணல் நடத்த திட்டமிட்டு இருந்தார். இந்த நேர்காணலை எக்ஸ் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பவும் எலான் மஸ்க் திட்டமிட்டு இருந்தார்.
இந்திய நேரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி அளவில் நேரலையாக ஒளிபரப்ப இருந்தது. இந்நிலையில், எக்ஸ் தளத்தின் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் காரணமாக நேரலை தடைபட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், எக்ஸ் தளத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பத் கண்டறியப்பட்டுள்ளது.
அதை சரி செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக பதிவிட்டுள்ளார். முன்னதாக 80 லட்சம் பார்வையாளர்களுடன் நேரலையை தொடங்குவதற்கான சோதனையை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாக குறைந்த எண்ணிக்கையிலான பார்வையாளர்களுடன் நிகழ்ச்சியை தொடரவும், அதன் பின் நேரலை வீடியோவை உடனடியாக வெளியிடவும் திட்டமிட்டு உள்ளதாக எலான் மஸ்க் பதிவிட்டு உள்ளார்.
நேரலை தொடங்குவதற்கான நேரம் தொடங்கி 25 நிமிடங்களுக்கு அதை காண முயன்ற பயனர்களுக்கு இடையூறுகள் ஏற்பட்டதாகவும் அதை கொண்டு எக்ஸ் தளத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக டிரம்புடனான நேரலை முன் தயாரிப்பு கேள்விகளை கொண்டு இருக்காது என்றும், அனைத்தும் விதமான பகுதிகளை உள்ளடக்கிய ஒளிவு மறைவற்ற கேள்விகளை கொண்டு இருக்கும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார்.
மேலும், பயனர்கள் தங்களது கேள்விகளை அனுப்பலாம் என்றும் அதுகுறித்தும் நேரலையில் விவாதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக நேரலை தடை பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
குடியரசுக் கட்சியின் சார்பாக டொனால்ட் டிரம்ப்பும், ஜனநாயக கட்சியின் சார்பில் கமலா ஹாரீசும் அதிபர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். அதிபர் தேர்தலில் டிரம்ப்பை ஆதரிப்பதாக டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார். நீண்ட நாட்களுக்கு பின் எக்ஸ் தளத்திற்கு திரும்பிய டிரம்ப் அளிக்கும் நேர்காணல் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நாட்டை விட்டு வெளியேற அமெரிக்கா தான் காரணமென ஹேக் ஹசீனா குற்றச்சாட்டு? - sheikh hasina alleges america