சென்னை: 2024ஆம் ஆண்டில் பல்வேறு அரசு பணிகளுக்கு 10,701 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் கோபால சுந்தர ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வெவ்வேறு நிலைகளில் நிலுவையிலிருந்த 30 தேர்வுகளின் தேர்வுப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டு 2024ஆம் ஆண்டில் நடத்தப்பட்டன. அவ்வாறு நடைபெற்ற தேர்வுகள் மூலம் 2024-ம் ஆண்டு மட்டும் 10,701 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்கு தேர்வு (selection) செய்யப்பட்டுள்ளனர். 2024-ம் ஆண்டு, 14,353 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக அரசின் 42 பொதுத்துறை நிறுவனங்கள், சட்டபூர்வ வாரியங்கள், மற்றும் சட்டபூர்வ ஆணையங்களில் (authorities) உள்ள 1406 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. மேலும் நேரடி நியமனங்களில் சமூக நீதியை வலுப்படுத்த 661 பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான குறைவு (shortfall) காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.
2024-ம் ஆண்டு தேர்வர்களின் நலன் கருதியும், தேர்வுப்பணிகளை விரைவுபடுத்தவும், தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன:தேர்வு நடைமுறைகளில் தேர்வு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக 2024-ம் ஆண்டு தெரிவுப்பணிகள் நிறைவுபெற்ற 30 தேர்வுகளில் தெரிவு பெற்ற தேர்வர்களின் பதிவெண்களுடன் கூடிய தெரிவுப் பட்டியல், கொள்குறி வகையில் (objective type) நடைபெற்ற 25 தேர்வுகளுக்கான இறுதி விடைகள் (final answer keys), விரிந்துரைக்கும் வகையில் (descriptive type) நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வுகளின் (தொகுதி I, IA, II, மற்றும் IIA பணிகள்) தேர்வர்களுடைய விடைப்புத்தகங்கள் (answer booklets), மற்றும் 27 தேர்வுகளில் தெரிவு செய்யப்படாத தேர்வர்களின் மதிப்பெண்களின் விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: அதானிக்கு ஷாக் கொடுத்த மின்வாரியம்.. டெண்டரை ரத்து செய்து அதிரடி!
அனைத்து தேர்வுகளும் ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்ட தேதிகளில் நடத்தப்பட்டுள்ளன. மேலும், தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்திக்கொள்வதற்காக டிசம்பர் 2024-ல் வெளியிடப்படவேண்டிய 2025-ம் ஆண்டிற்கான தேர்வுகளின் ஆண்டுத்திட்டம், இரண்டு மாதங்களுக்கு முன்பாக அக்டோபர் மாதத்திலேயே வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (தொகுதி | பணிகள் -க்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் 33 வேலை நாட்களுக்குள்ளும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி II மற்றும் IIA பணிகள்)க்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் 57 வேலை நாட்களுக்குள்ளும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-IV (தொகுதி பணிகள்)-க்கான தேர்வு முடிவுகள் 92 வேலை நாட்களுக்குள்ளும் வெளியிடப்பட்டன.
தேர்வாணைய தேர்வர்களுக்கு தேர்வு தொடர்பான துல்லியமான மற்றும் முழுமையான தகவல்களை வழங்கும்பொருட்டு தேர்விற்கான அறிவிக்கையின் வடிவம் மாற்றியமைக்கப்பட்டு, வெவ்வேறு பதவிகளுக்கான தகுதி நிபந்தனைகள், தேர்வு நடைமுறை, இணையவழியில் விண்ணப்பிக்கும் முறை, சிறப்பு பிரிவினர்களுக்கான சலுகைகள் மற்றும் இடஒதுக்கீடு, சான்றிதழ்களின் படிவங்கள், பாடத்திட்டம் மற்றும் தேர்வு எழுதும்போது தேர்வர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் தொடர்பான விவரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.தேர்வர்கள் தேர்வு தொடர்பான செய்திகள் மற்றும் தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ 'X' தளம் மற்றும் டெலிகிராம் சேனல் தொடங்கப்பட்டு, தகவல்கள் தேர்வர்களுக்கு விரைவாக வழங்கப்பட்டு வருகிறது,"எனக் கூறப்பட்டுள்ளது.