சென்னை: அதிகாரிகளின் அலட்சியத்தால் கட்டப்படும் விதிமீறல் கட்டிடங்களால் மழைக்காலங்களில் நகரம் வெள்ள பாதிப்புகளால் கடுமையாக பாதிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கட்டிட வீதிமீறல் தொடர்பாக சென்னையை சேர்ந்த சாந்தி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்திற்கு சீல் வைப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அந்த நோட்டீஸ்க்கு மனுதாரர் அளித்த விளக்கத்தை மாநகராட்சி நிராகரித்தது.
இதை எதிர்த்து அரசுக்கு மறு ஆய்வு மனு அளித்துள்ள நிலையில், நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து சாந்தி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ். எம் சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு, அரசிடம் அளித்த மறு ஆய்வு மனுவை பரிசீலிக்க உரிய நேரம் வழங்க வேண்டும். அவ்வாறு நேரம் வழங்காமல் விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் இந்த வழக்கு தாக்கல் செய்துள்ளதாக கூறி வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும், சென்னை மாநகரம் விதிமீறல் கட்டிடங்களால் காங்கிரீட் காடாக மாறிவிட்டது என்றும், இதன் காரணமாக நகரம் மழைக்காலங்களில் வெள்ள பாதிப்புகளை சந்திப்பாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
விதிமீறல் கட்டிடங்களுக்கு எதிராக ஆரம்ப நிலையிலேயே அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்காததால் அண்டை வீட்டார் மட்டுமல்லாமல் பொதுமக்களும் ஆபத்தை எதிர்நோக்குகின்றனர். சட்டத்தை அமல்படுத்த வேண்டிய அதிகாரிகள், வீதிமீறலில் ஈடுபடுவோருக்கு உடந்தையாக செயல்படுகின்றனர் என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.