டாக்கா (வங்கதேசம்):லங்கதேசத்தின் சத்கிரா மாவட்டத்துக்குட்பட்ட ஈஸ்வரிபூர் கிராமத்தில் ஷியாம் நகரில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஜெஷோரேஸ்வரி கோயில். இங்கு வீற்றிருக்கும் காளி தேவியின் தலையில் சூடப்பட்டிருந்த தங்கக் கிரீடம் நேற்று திருடுப்போய் விட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
கோயில் அர்ச்சகர் திலீப் முகர்ஜி நேற்று காலை வழக்கம் போல் பூஜைகளை முடித்துவிட்டு சென்றுள்ளார். அவர் சென்றப்பின் மதியம் 2 -2:30 மணி அளவில் இத்திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது.
காளியின் கிரீடம் களவு போனதை கண்டு அதிர்ச்சியடைந்த கோயில் துப்புரவு பணியாளர்கள், இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் திருடர்களை கண்டறிய, கோயில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம் என்று ஷியாம் நகர் காவல் நிலைய ஆய்வாளர் தைசுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.
தங்கம் மற்றும் வெள்ளி முலாம் பூசப்பட்ட இந்த கிரீடத்தை, கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி, தமது வங்கதேச பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி ஜெஷோரேஸ்வரி கோயிலுக்கு விஜயம் செய்தபோது பரிசாக அளித்தார் என்பது குறி்ப்பிடத்தக்கது.