சிலி: அமெரிக்க நாடான சிலியில் பயங்கர காட்டுத்தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 46 பேர் உயிரிழந்து உள்ளதாக, அந்நாட்டு பிரதமர் கேப்ரியல் போரிக் இன்று தெரிவித்து உள்ளார். மேலும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அவர் கூறி உள்ளார்.
அது மட்டுமல்லாமல், சிலியில் 92 தீ விபத்துகள் நடைமுறையில் உள்ளதாகவும், இதனால் 43 ஆயிரம் ஹெக்டேர் அளவில் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளதாகவும் சிலியன் உள்துறை அமைச்சர் கரோலினா டோஹா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்து உள்ளார். மேலும், ஆயிரத்து 100க்கும் அதிகமான வீடுகள் இதில் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் டோஹா கூறி உள்ளார்.
அதேநேரம், தனது உறவுகள், வீடுகள் மற்றும் உடமைகளை இழந்து வாடும் சிலி மக்களுக்கு தனது அனுதாபங்களை மெய்நிகர் மூலம் தெரிவித்த சிலி பிரதமர் கேப்ரியல் போரிக், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதில் அரசு மும்முரமாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மத்திய சிலியில் தீ விபத்து ஏற்பட்டு உள்ள இடங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேநேரம், இதன் வெப்ப அலை லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் வீசியுள்ளது. இந்த நிலையில், மாநிலத்தில் அவசர நிலையை போரிக் பிறப்பித்து உள்ளார். அதோடு, கடும் பாதிப்படைந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே, 20 தற்காலிக கூடாரங்களை வால்பரைசோ, ஓ ஹிக்கின்ஸ் மற்றும் லாஸ் லாகோஸ் ஆகிய மாகாணங்களில் சிலியின் கல்வி அமைச்சகம் அமைத்து உள்ளது. மேலும், இதன் மீட்புப் பணியில் 19 ஹெலிகாப்டர்கள் மற்றும் 450க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு உள்ளனர்.
அது மட்டுமல்லாமல், வால்பரைசோ மாகாணத்தில் நடைபெற இருந்த விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரியில் சிலியில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாதிக்கப்பட்டதுடன் 22க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஆஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி 4 இந்தியர்கள் உயிரிழப்பு! என்ன நடந்தது?