கனடா: கனடாவின் பிராம்டன் பகுதியில் இந்து கோயிலில் இந்திய தூதரகத்தின் சார்பில் இந்தியர்களுக்கு வாழ்நாள் சான்று வழங்கும் முகாம் கடந்த நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது கோயிலுக்குள் கொடிகளுடன் வந்த காலிஸ்தான் அமைப்பினர் இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
இதனால், இந்து கோயிலில் இருந்த இந்தியர்களுக்கும் காலிஸ்தான் அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், காலிஸ்தான் அமைப்பினர் கோயில் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டொரண்டோவைச் சேர்ந்த லால் பானர்ஜி (57) என்பவரை, கனடா குற்றவியல் சட்டப் பிரிவு 319 (1) பொது வெறுப்பு தூண்டுதல் என்ற பிரிவின் கீழ் கைது செய்துள்ளனர்.
இந்து கோயில்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவது இந்து-கனடிய சமூகத்தினரிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது குறித்து பீல் பிராந்திய காவல்துறை அதிகாரி டைலர் பெல் தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ள வீடியோவில், பிராம்டன் பகுதி இந்து கோயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து, பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியுள்ளன. வன்முறை மற்றும் குற்றங்கள் மீதான விசாரணையின் விளைவாக, போலீசார் ரணேந்திர லால் பானர்ஜியை கைது செய்துள்ளனர்.