போர்ட் அயு பிரின்ஸ்: வட அமெரிக்க நாடான ஹைதியில் கடந்த சில ஆண்டுகளாக நிலவும் பொருளாதார ஸ்திரத்தன்மையற்ற சூழல் மற்றும் உள்நாட்டு கலவரம் காரணமாக பொது மக்கள் பல்வேறு துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக, அந்த நாட்டைச் சேர்ந்த பலரும் அண்டை நாடுகளுக்கு சட்டவிரோதமாக குடிபெயர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் 80க்கும் மேற்பட்ட ஹைதியை சேர்ந்த மக்களை ஏற்றிக் கொண்டு டர்க் மற்றும் கைகோஸ் தீவுகளுக்கு படகு ஒன்று சென்றது. அந்த தீவுகளுக்கு குடிபெயர்வதற்காக மக்கள் சென்று கொண்டிருந்த போது நடுக்கடலில் தீடீரென படகில் தீப்பிடித்தது. இதனால், படகில் இருந்தவர்கள் பதற்றத்திற்கு ஆளாகி தண்ணீருக்குள் குதித்து தங்களை காப்பாற்றிக் கொள்ள முயன்றனர்.
இந்த துயர சம்பவத்தில் படகில் பயணித்த 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஹைதி கடலோர படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நீரில் தத்தளித்துக் கொண்டு இருந்த 41 பேரை மீட்டனர். மீட்கப்பட்டவர்களில் பலருக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.