சென்னை : குன்றத்தூரை அடுத்த மணஞ்சேரி பகுதியில் எலி மருந்தின் காரணமாக இரு குழந்தைகள் மரணமடைந்த குடியிருப்பு பகுதிக்கு ஈடிவி பாரத் நிருபர் சென்ற போது, அந்த அடுக்குமாடி குடியிருப்பில் அசாதாரணமான ஒரு அமைதி நிலவியது. வார இறுதி நாளான அன்று கூட குழந்தைகளை வீட்டினுள்ளேயே வைத்திருப்பதாக பெற்றோர் கூறுகின்றனர்.
நவம்பர் 13ம் தேதியன்று எலிமருந்தின் தாக்கத்தால் இரு குழந்தைகள் மரணித்ததை சுட்டிக்காட்டும் அவர்கள் அன்றைய தினம், வீட்டிற்கு வெளியேயும் எலி மருந்தின் நெடியை தங்களால் உணர முடிந்ததாகக் கூறுகின்றனர். இதன் பின்னர் தடயவியல் அதிகாரிகள் எலி மருந்தை எடுத்துச் சென்ற பின்னரும் அச்சத்தின் காரணமாக தங்கள் குழந்தைகளை வெளியே அனுமதிப்பதில்லை என அவர்கள் கூறுகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான குன்றத்தூர் போலீசாரின் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் வசித்து வரும் கிரிதரன் (34), பவித்ரா (31) தம்பதி தங்கள் வீட்டில் தொடர்ச்சியான எலித் தொல்லையை சமாளிக்க, தனியார் பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தை நாடியுள்ளனர். தியாகராயநகரில் உள்ள அந்த நிறுவனம் 3 ஊழியர்களை கிரிதரன் வீட்டிற்கு அனுப்பியுள்ளது.
எலி மருந்து வைக்கும் பணியின் போது கிரிதரன், அவரது மனைவி பவித்ரா மற்றும் குழந்தைகள் வைஷ்ணவி, சாய் சுதர்சன் ஆகியோர் வெளியே சென்றுவிட, ஊழியர்கள் வீட்டை விட்டு வெளியேறிய பின்னரே 4 பேரும் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
விஷமான மருந்து : எலி மருந்துகள் வைக்கப்பட்ட அன்றைய தினம் இரவு, கிரிதரன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் படுக்கை அறையில் ஏசி போட்டு உறங்கி உள்ளார். அப்போது வீட்டில் வைத்த எலி மருந்து காற்றில் பரவியதால், உறங்கிக் கொண்டிருந்த நான்கு பேருக்கும் மூச்சுத்திணறல் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன.
இரு குழந்தைகள் உயிரிழப்பு : எலி மருந்தின் நெடி தாங்க முடியாமல் விழித்துக் கொண்ட, கிரிதரன் உடனடியாக தனது நண்பரை அழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த கிரிதரனின் நண்பர் நான்கு பேரையும் அங்கிருந்து மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.
ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி இரு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கிரிதரன் மற்றும் அவரது மனைவி பவித்ராவை மேல் சிகிச்சைக்காக போரூர் பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வழக்குப்பதிவு : இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த குன்றத்தூர் போலீசார் உயிரிழந்த இரு குழந்தைகளின் உடலையும் மீட்டு, உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பெற்றோர் இருவரும் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த நிலையில் அவர்களுக்கு குழந்தைகளின் மரணம் குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை என உறவினர்கள் கூறினர்.
இதையும் படிங்க : இரு பிஞ்சுகளின் உயிரைப் பறித்த எலி மருந்து.. தனியார் நிறுவன ஊழியர்கள் இருவர் கைது.. அபாய கட்டத்தை தாண்டிய பெற்றோர்!
போலீசாரின் விசாரணையின் அடிப்படையில், வீட்டில் எலி மருந்து வைத்த ஊழியர், நிறுவனத்தின் உரிமையாளர் உள்பட மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, தனியார் நிறுவன ஊழியர்களான தினகரன், சங்கர் தாஸ் ஆகிய இரண்டு பேரை குன்றத்தூர் போலீசார் கைது செய்தனர். நிறுவன உரிமையாளர் பிரேம்குமார் இன்னமும் கைது செய்யப்படவில்லை.
கைதானவர்கள் வாக்குமூலம் : இந்நிலையில், கைதான இருவரும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர். அதில், வீட்டின் அறையில் மூன்று இடங்களுக்கு பதிலாக 12 இடங்களில் எலி மருந்து வைத்ததே குழந்தைகளின் இறப்புக்கு காரணம் என்றும், மருந்து வைக்கப்பட்ட அறைக்குள் யாரும் வரமாட்டோம் என வீட்டின் உரிமையாளர் தெரிவித்ததன் பேரில், 12 இடங்களில் மருந்துகள் வைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
மருத்துவமனை அறிக்கை : உயிருக்கு போராடி வந்த கணவன், மனைவி இருவரும் தற்போது ஆபத்து கட்டத்தை தாண்டி நலமுடன் இருப்பதாகவும், கூடுதலாக இரண்டு நாட்களுக்கு இருவரும் ஐசியு-வில் வைத்து கண்காணிக்கப்படுவார்கள் என தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
இதையும் படிங்க : இரண்டு பிஞ்சு உயிர்களைப் பறித்த எலி மருந்து: எமனாக மாறிய நச்சுக் காற்று! மருத்துவர்கள் சொல்வதென்ன?
அரசு மருத்துவமனை நிர்வாகத்துக்கு போலீசார் கடிதம் : இந்நிலையில், தடய அறிவியல் துறை மருத்துவ அதிகாரிகள் முன்னிலையில் இரு குழந்தைகளின் உடல்கள் உடற்கூராய்வு செய்யப்பட வேண்டும் என குரோம்பேட்டை அரசு மருத்துவமனை நிர்வாகத்திற்கு போலீசார் கடிதம் ஒன்று கொடுத்தனர்.
அக்கடிதத்தின் அடிப்படையில், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த இரு குழந்தைகளின் உடலும் ஆம்புலன்ஸ் மூலமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
குழந்தைகளின் உடல்கள் உடற்கூராய்வு : இந்நிலையில், இன்று கனவன் - மனைவி இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மீண்டு வந்த நிலையில் இருவரிடமும் குன்றத்தூர் போலீசார் குழந்தைகளின் உடற்கூறு ஆய்விற்கான படிவத்தில் அனுமதி கையெழுத்து பெற்றனர்.
இதையடுத்து சிறப்பு மருத்துவக் குழுவினர் மற்றும் குன்றத்தூர் போலீசார் முன்னிலையில் வீடியோ பதிவுடன் உடற்கூராய்வு நடைபெற்றதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் நடைபெற்ற மணஞ்சேரி பகுதி சோகத்தில் மூழ்கியது.
இதையும் படிங்க : எலி மருந்து கசிந்து மரணித்த குழந்தைகள்: வீடியோ பதிவுடன் உடற்கூராய்வு!
இச்சம்பவம் குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பாலா ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "நான் இதே பகுதியில் கடந்த நான்கு வருடங்களாக வசித்து வருகிறேன். கிரிதரனை எனக்கு நன்கு தெரியும். அவர் தனியார் வங்கியில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். எனது பேரப்பிள்ளைகளுடன் தான் அவர்களின் மகள் தினந்தோறும் விளையாடுவாள்.
இந்த நிலையில் அவர்கள் வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருப்பதால், தனியார் பூச்சி கட்டுப்பாட்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர். அதில் பணிபுரியும் ஊழியர்கள் கிரிதரன் வீட்டிற்கு வந்து மருந்துகள் தெளித்து, ஆங்காங்கே எலி மருந்துகளை வைத்து விட்டு சென்றனர். அதன் பிறகு இரவு கிரிதரன் குடும்பம் படுத்து உறங்க சென்றுள்ளனர்.
இதையடுத்து அதிகாலை அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. உடனே அவர்கள் வெளியே வந்து சத்தம் போட்டு உள்ளார். இதையடுத்து நாங்கள் சென்று அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்.
ஆனால் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி இரண்டு குழந்தைகளும் உயிரிழந்து விட்டனர். இந்த சம்பவம் எங்கள் தெருவில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மிகவும் வருத்தமாக உள்ளது. கடந்த தீபாவளிக்கு கூட குழந்தைகளுடன் கிரிதரன் பட்டாசு வெடித்து சந்தோசமாக இருந்தார்.
தற்போது எலி மருந்து தாக்கத்தினால் எங்கள் தெருவில் உள்ள அனைத்து குழந்தைகளையும் வீட்டின் வெளியே அனுப்பாமல் உள்ளே வைத்துக் கொண்டு இருக்கிறோம். மேலும், தடயவியல் நிபுணர்கள் நேரடியாக வந்து எலி மருந்துகளை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர். எலிகளை கொள்வதற்கு வைத்த மருந்தில் பிஞ்சு குழந்தைகள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது" என தெரிவித்தார்.
இதுகுறித்து அதே குடியிருப்பில் வசித்து வரும் பெண் ஒருவரிடம் கேட்ட போது, "நாங்கள் தினமும் அந்த குழந்தைகளை பார்ப்போம். தற்போது அந்த குழந்தைகள் உயிரிழந்தது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அதிலிருந்து எங்களால் மீள மூடியவில்லை. எங்களால் பேச முடியவில்லை" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்