கோயம்புத்தூர் : கோவையைச் சார்ந்த பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் கடந்த நவ 14ம் தேதி அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட ஊர்களில் 5 இடங்களிலும், கர்நாடகா ,மேற்கு வங்காளம், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மேகலாயா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் என மொத்தம் 22 இடங்களில் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனை கடந்த 16ம் தேதி இரவு வரை நீடித்தது. இந்நிலையில், இந்த சோதனையில் மொத்தம் ரூ.12.41 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பல்வேறு முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : கோவை தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் இடங்களில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை சோதனை..!
மேலும், வங்கியில் உள்ள ரூ.6.42 கோடி பணத்தை முடக்கி இருப்பதாகவும், அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில், இந்த சோதனை நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2022ம் ஆண்டு அளவுக்கு அதிகமாக இவர் சொத்து சேர்த்ததாக கூறி இவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ரூ.400 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்