சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு கடந்த மாதம் விழுப்புரம் மாவட்டம் வி.சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், தவெக கொள்கை குறித்து விளக்கப்பட்டது. அது மட்டுமின்றி மத்தியில் ஆளும் பாஜகவையும், தமிழகத்தில் ஆளும் திமுகவையும் எதிர்த்து விஜய் பேசினார்.
மேலும், மாநாட்டில் தவெகவின் தலைமையை ஏற்று வரும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்கு அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என விஜய் கூறி இருந்தார். இதன் மூலம் விஜய் திருமாவளவனை குறி வைத்து தான் பேசினார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
திருமாவளவன் விளக்கம் : "அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணியில் ஒரு அங்கமாக உள்ளோம். 2 கூட்டணிகளை உருவாக்கியதில் விடுதலை சிறுத்தைகளுக்கு பங்கு உண்டு. நாங்கள் உருவாக்கிய கூட்டணிகளை மேலும் பலப்படுத்த வேண்டும். இந்த கூட்டணிகளை விட்டுவிட்டு, இன்னொரு கூட்டணிக்குச் செல்ல வேண்டும் என்ற தேவையில்லை.
திட்டமிட்டு விடுதலை சிறுத்தைகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிற முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். நம்பகத்தன்மையை மேற்கொள்ள முயற்சிக்கின்றனர். இதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தொகுதியில் திமுகவுடன் கூட்டணி தொடரும்" என விளக்கமளித்தார்.
இது ஒரு புறம் இருக்க, மாநாட்டில் விஜய் அதிமுக குறித்து எவ்வித விமர்சனமும் எழுப்பவில்லை. இதன் காரணமாக அதிமுகவினரும் விஜய் மாநாட்டில் பேசியதற்கு எவ்வித எதிர் விமர்சனமும் வைக்கவில்லை. இதனால்
தவெக - அதிமுக கூட்டணி சட்டமன்றத்தில் அமைய வாய்ப்பு உள்ளது என அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளானது.
எடப்பாடி விளக்கம் : இந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக - அதிமுக கூட்டணி அமைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, "தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடம் இருக்கிறது. விஜய் இப்போது தான் கட்சி தொடங்கி மாநாடு நடத்தி இருக்கிறார். கூட்டணி என்பது தேர்தல் சமயத்தில் சூழலுக்கு தகுந்தவாறு அமைக்கப்படும்" என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இதன் மூலம் அதிமுக - தவெகவிற்கு இடையே மோதல் இல்லாமல் சுமுகமாக சூழல் நிலவி வந்தது. இதை வைத்து தான் தவெக - அதிமுக கூட்டணி வரும் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அமையும் என மீண்டும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வந்தன.
இந்நிலையில் தவெக - அதிமுக கூட்டணி குறித்த செய்திக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், தவெக தலைவர் விஜய் அவர்கள் ஒப்புதலுடன் ஒரு அறிக்கையை இன்று ( நவ 18) வெளியிட்டு இருந்தார்.
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
— TVK Party Updates (@TVKHQUpdates) November 18, 2024
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கழகத்தின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்தும் தமது உரையில் கழகத் தலைவர் அவர்கள் தெளிவாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்.
கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி…
அறிக்கை : வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்க தயாராகி வருகிறது.
இச்சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முதன்மை சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு அஇஅதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, பிரதான தமிழ் நாளிதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைக் கொண்டு நேற்று(நவ 17) தலைப்பு செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ, அடிப்படையோ அற்றது என அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதையும் படிங்க : அதிமுகவுடன் கூட்டணியா? தவெக அளித்த விளக்கம் !
இந்த அறிக்கை குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "தவெக - அதிமுக கூட்டணி குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வந்த நிலையில், அதை மறுத்து பேச வேண்டிய நிலைக்கு விஜய் தள்ளப்பட்டுள்ளார். மாநாட்டில் அதிமுக குறித்து எப்போது விஜய் பேச வில்லையோ, அப்போதே அதிமுக - தவெக உடன் கூட்டணி வைக்கலாம் என நினைத்து முயற்சியும் செய்து பேசியுள்ளார்கள். தற்போது அந்த பேச்சுவார்த்தை நின்றுவிட்டது.
ஒரு பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, விஷயம் வெளியே கசிந்தால் அதை மறுப்பது அரசியல் கட்சிகளின் வழக்கம் தான். தேர்தலுக்கு இத்தனை காலம் முன்பே தவெக - அதிமுக கூட்டணி உருவாகிவிட்டால் அதிமுகவிற்கு பாஜக ரெய்டு போன்ற குடைச்சல் தர வாய்ப்புள்ளது.
எனவே, தேர்தல் நெருங்கும் போது பார்த்துக்கொள்ளலாம் என அவர்கள் இருப்பார்கள். தவெக அறிக்கையின் காரணமாக மீண்டும் பேச்சுவார்த்தை தொடராது என கூற முடியாது. விஜய்யின் முதல் குறி திமுகவின் கூட்டணியை உடைப்பது தான். அதனால் தான் ஆட்சியில் பங்கு எனக் கூறி விசிகவை குறி வைத்தார். அதிமுகவுடன் - தவெக கூட்டணி சென்றால் சாதகமும் இருக்கிறது, பாதகமும் இருக்கிறது.
20% ஓட்டு அதிமுக வைத்திருப்பது தவெகவிற்கு சாதகமாக இருந்தாலும், ஊழல் கட்சியுடன் கூட்டணி வைத்துவிட்டார் என பாதகமாக பேசுவார்கள். தேர்தலுக்கு முன்பாக விஜய்யின் சாயம் வெளுத்துவிடும் என்பதால் மறுக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய் தள்ளப்பட்டுள்ளார்.
விஜய்யின் மூன்று யோசனைகள் : திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை தவெக பக்கம் கொண்டு வந்து திமுகவை பலவீனப்படுத்துவதன் மூலம் வெற்றி பெறுவது. அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் தவெக கூட்டணி அமைப்பது, தவெக தனியாக நிற்பது ஆகிய மூன்று யோசனைகளை வைத்துள்ளார்.
அதிமுக தான் கூட்டணி ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். வலுவான கூட்டணி அமையவில்லை என்றால் அதிமுக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை. அதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்த தவெக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து இதுபோன்று விஷயங்களை அதிமுகவினரே வெளியிட்டுள்ளனர்.
அதிமுகவினர் பற்றி மாநாட்டில் எதுவும் பேசாமல் அவர்களின் குறைகளை கூறாமல் விஜய் கண்டும் காணாமல் விட்டது தான் இதற்கு காரணம். திமுகவை பலவீனம் செய்வது தான் விஜய் எண்ணமாக இருந்தது. அதை மையப்படுத்தி தான் மாநாட்டில் விஜய் பேசியுள்ளார்.
கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்றால் இரு கட்சிகளுக்கு பெரும்பாண்மை கிடைக்க வில்லை என்றால் இயற்கையாக கூட்டணி ஆட்சி தான் அமையும். தேர்தல் முடிவுக்கு பிறகு தான் கூட்டணி ஆட்சி குறித்து பேசப்படும் அதிமுக - தவெக கூட்டணி குறித்த பேச்சை விஜய் வளர்க்க விரும்பவில்லை" என்றார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்