தாகா: வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியாவிடம் கோர உள்ளதாக அந்த நாட்டின் தலைமை ஆலோசகர் முமகது யூனூஸ் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசு பதவி விலக்கோரி கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அந்நாட்டில் மாணவர்கள் உள்ளிட்டோர் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டனர். நாளடைவில் இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் 1500 பேர் கொல்லப்பட்டனர். 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர். இதையடுத்து அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பிரமதமர் பதவியில் இருந்து விலகினார். நாட்டை விட்டு வெளியேறிய அவர், இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
இதையடுத்து வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி தலைமை ஆலோசகர் முகமது யூனூஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றது. இடைக்கால அரசு பதவி ஏற்று 100 நாட்கள் கடந்ததையடுத்து அந்நாட்டின் அரசு செய்தி முகமைக்கு பேட்டியளித்துள்ள அந்நாட்டின் தலைமை அரசியல் ஆலோசகர் முகமது யூனூஸ், "இந்து சிறுபான்மையினர் உட்பட தேசத்தில் உள்ள அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. கொல்லப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீதி கிடைப்பதையும் உறுதி செய்வோம். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை மீண்டும் நாட்டுக்கு திருப்பி அனுப்பும் படி இந்தியாவிடம் கோரிக்கை விடுப்போம்.
இதையும் படிங்க: 9 ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்பு.. பள்ளிக்கு வர வேண்டாம் என அரசு உத்தரவு..!
ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் தகவல்களை சேகரித்து வருகின்றோம். காயமடைந்தவர்களுக்கு தாகாவில் உள்ள 13 மருத்துவமனைகள் உட்பட பல்வேறு இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நான் பதவி ஏற்ற இரண்டு மாதங்களில் வங்கதேசம் முழுவதும் 32000 இடங்களில் துர்கா பூஜை நடைபெற்றது. இந்துகள் சிறப்பாக கொண்டாடுவதற்காக துர்கா பூஜையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விரைவில் தேர்தல் ஆணையம் அமைக்கப்பட உள்ளது. தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள் மேற்கொண்ட பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்படும்," என்றார்.
இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவை வங்கதேசத்துக்கு அனுப்பும்படி கோரப்போவதில்லை என்று இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் ஃபைனான்சியல் டைம்ஸ் என்ற இதழுக்கு கடந்த மாதம் அளித்த பேட்டியில் முகமது யூனூஸ் கூறியிருந்தார். அந்த நிலையில் இருந்து மாறி இப்போது ஷேக் ஹசீனாவை தமது நாட்டிடம் ஒப்படைக்கும்படி இந்தியாவிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்