கொழும்பு: 21 பேர் கொண்ட இலங்கை அமைச்சரவை பதவி ஏற்றது.புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் ஒருவர் தமிழ் மொழியில் பதவி ஏற்றுக் கொண்டார்.
இலங்கையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் அனுரா குமார திசநாயகேவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் வெற்றி பெற்றது. தமிழ் வம்சாவளியினர் வசிக்கும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் இந்த கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 225 தொகுதிகளில் 62 சதவிகித வாக்குகளைப் பெற்று 159 இடங்களை வென்றுள்ளது.
இலங்கை அரசியல் சட்டத்தின்படி 30 அமைச்சர்கள் இடம் பெற முடியும். எனினும் நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு குறைந்த எண்ணிக்கையிலான அமைச்சர்களே நியமிக்கப்படுவார்கள் என அதிபர் அனுரா குமார திசநாயகே கூறி வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற உடன் வெறும் 3 அமைச்சர்களை மட்டுமே அதிபர் நியமித்திருந்தார்.
இப்போது அவர்களையும் சேர்த்து 21 அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் நாடாளுமன்றத்துக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 12 பேரும் அடக்கம். மேலும் ஐந்து அமைச்சர்கள் பேராசிரியர்களாக பணியாற்றிய அனுபவம் பெற்றவர்கள் ஆவர். பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. சரோஜா சாவித்திரி பால்ராஜ் என்ற தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் சிங்களர்கள் அதிகம் வசிக்கும் தெற்கு பகுதியில் இருந்து இவர் வெற்றி பெற்றுள்ளார்.
இதையும் படிங்க : "கங்குவா எதிர்மறை விமர்சனம்" ஜோதிகா பதிலடி!
இலங்கையின் புதிய அமைச்சரவையில் இரண்டு பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.மேலும், மீன்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ராமலிங்கம் சந்திரசேகரன் தமிழ் மொழியில் பதவி ஏற்றுக் கொண்டார். இவரும் தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். புதிய நாடாளுமன்றம் வரும் வியாழக்கிழமை கூட உள்ளது.
அமைச்சரவை கூட்டத்தில் பேசிய அதிபர் திசநாயகே,"எங்களுக்கு கொடுக்கப்பட்ட பெரிய அதிகாரத்தை நாங்கள் தவறாக பயன்படுத்த மாட்டோம், அதிகாரத்திற்கு வரம்புகள் இருக்கும் என்பதை நீங்கள் நிலைநாட்டுவீர்கள் என்று நம்புகிறேன்.அதிகாரத்தைப் பெறுவதற்காக பல தசாப்தங்களாக கடுமையாகப் போராடினோம். தேர்தலுக்கு முன்பு நாம் முன் வைத்த அரசியல் முழக்கங்கள் மற்றும் அரசியல் பாதை ஆகியவற்றால் நாம் வெற்றி பெற்றிருக்கின்றோம். எனவே இனிமேல், நமது முழக்கங்களுக்கு நாம் எவ்வாறு உண்மையாகச் செயல்படுகிறோம் என்பதை தீர்மானிக்க வேண்டும்," என்றார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்