அபுதாபி: இஸ்லாமிய நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் அனைத்து மொழி, மதங்களைச் சேர்ந்த மக்கள், குறிப்பாக இந்தியர்கள் பெருமளவில் தங்கி வேலை புரிந்து வருகின்றனர். அங்கு வாழும் இந்திய இந்து மக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையிலும், பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்கவும், 2015ஆம் ஆண்டு அபுதாபியில் இந்து கோயில் கட்டுவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது.
அதன் அடிப்படையில், 2018ஆம் ஆண்டு அபுதாபியின் முதல் இந்து கோயில் அடிக்கல் நாட்டு விழாவை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். 2019ஆம் ஆண்டு இக்கோயிலின் கட்டுமானப் பணிகள் துவங்கியது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற உலக நாடுகளில் இந்து கோயில்களை நிறுவி வரும் பாப்ஸ் (BAPS) அமைப்பு, அபுதாபியில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் இக்கோயிலை கட்டி வந்தனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டப்பட்டு வரும் முதல் பாரம்பரிய இந்து கோயிலான BAPS சுவாமிநாராயண் சன்ஸ்தா கோயில், துபாய்-அபுதாபி ஷேக் சயீத் நெடுஞ்சாலையில், அபு முரைக்கா என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த கோயில் 32.92 மீட்டர் (108 அடி), 79.86 மீட்டர் (262 அடி) நீளம் மற்றும் 54.86 மீட்டர் (180 அடி) அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.