கராச்சி(பாகிஸ்தான்):கராச்சி விமானநிலையத்துக்கு வெளியே நடைபெற்ற தாக்குதலில் சீனாவை சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் காயம் அடைந்துள்ளனர்.
போர்ட் காசிம் மின்சார நிறுவனத்தில் இருந்து டேங்கர் லாரி உள்ளிட்ட வாகனங்கள் தெற்கு சிந்து மாகாணத்ததின் தலைநகர் கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையம் அருகே நேற்று இரவு சென்று கொண்டிருந்தன. அப்போது நடைபெற்ற தீவிரவாதத்தாக்குதலில் டேங்கர் லாரி பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த தாக்குதலில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலின் போது விமான நிலையக்கட்டங்கள் குலுங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தானின் கிழக்குப்பகுதி போலீஸ் டிஐஜி அஸ்பர் மகேசர், "எண்ணைய் எடுத்துச்செல்லப்பட்ட டேங்கர் லாரி வெடித்து சிதறியுள்ளது. எதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளோம்,"என்றார்.
இதையும் படிங்க:370வது பிரிவை மீண்டும் அமல்படுத்தக் கோரிய பாகிஸ்தான்.. ஐநா சபையில் இந்தியா பதிலடி!
இந்த தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாகிஸ்தானில் உள்ள சீன தூதரகம்," தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். தாக்குதலில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கின்றோம். இந்த நிகழ்வுக்குப் பின்னர் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றோம். காயம் அடைந்தோருக்கு பாகிஸ்தான் அரசு சிறப்பான மருத்துவ சிகிச்சைகளை அளிக்க வேண்டும். அதே நேரத்தில் இந்த தாக்குதல் குறித்து முழுமையான விசாரணை மேற்கொண்டு, தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டனை பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,சீன குடிமக்கள், சீன நிறுவனங்களின் பாதுகாப்பை பாகிஸ்தான் அரசு உறுதி செய்ய வேண்டும்," என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் வெளியிட்டுள்ள சமூக வலைதளபதிவில், கராச்சி விமான நிலையம் அருகே நடந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தான் அரசு இதனை உறுதிப்படுத்தவில்லை.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய பகுதிகளை சீனாவின் தலைநகருடன் இணைக்கும் பலகோடி ரூபாய் மதிப்புள்ள பெல்ட் மற்றும் சாலை முயற்சியின் கீழ் பாகிஸ்தானில் மேற்கொள்ளப்படும் சாலை கட்டமைப்பு பணிகளில் ஆயிரகணக்கான சீனர்கள் பணியாற்றி வருகின்றனர்.