தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

ஆண்களை விட பெண்களுக்கு ஒற்றை தலைவலி ஏற்படும் ஆபத்து 3 மடங்கு அதிகம் - ஏன் தெரியுமா? - risk of migraines - RISK OF MIGRAINES

Migraines among men and women: ஒற்றை தலைவலிக்கு பெண் பாலின ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் முக்கிய பங்கு வகிக்கிறது என நரம்பியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஒற்றை தலைவலி
ஒற்றை தலைவலி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 4, 2024, 1:09 PM IST

Updated : Apr 2, 2024, 4:36 PM IST

சென்னை: ஒற்றை தலைவலி சாதாரண தலைவலிகளைப்போல் அல்லாமல் தலையில் பக்கவாட்டுகளில் கடுமையான துடிக்கும் வலியை ஏற்படுத்தும். பெரும்பாலும் குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளுடன் 2 அல்லது 3 நாட்கள் வரை நீடிக்கும். இது போன்ற ஒற்றை தலைவலிகள் அதிகமான இரைச்சலால் மேலும் தீவிரமடையும். இந்த ஒற்றை தலைவலி 15 அல்லது 25 வயதில் தொடங்கி 40 வயது வரை இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஒற்றை தலைவலி:மக்கள் தொகையில் சுமார் 15 சதவீதம் பேர் ஒற்றை தலைவலியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மரபணு ரீதியாக 35 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஸ்பெயின் ஆராய்ச்சியாளர்களால் 2018ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஆண்களை விட பெண்களே ஒற்றை தலைவலியால் அதிகம் பாதிக்கப்படுவதாக கண்டறிந்துள்ளனர்.

18 வயது முதல் 49 வயதுடைய பெண்களிடையே உள்ள இயலாமைக்கும், அவர்கள் அதிகம் சோர்வுறுவதற்கும் ஒற்றை தலைவலி ஒரு முக்கிய காரணமாகும் என குளோபல் பர்டன் ஆஃப் தீசஸ் 2019 ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒற்றை தலைவலியால் ஆண்களை விட பெண்கள் ஏன் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம்.

பெண்களுக்கு ஏன் ஆபத்து அதிகம்: டாக்டர் பிரவீன் ஃபோர்டிஸ் நினைவு ஆராய்ச்சி நிறுவனத்தின் நரம்பியல் துறையின் முதன்மை இயக்குநர் குப்தா கூறுகையில், “ஆண்களை விட பெண்களுக்கு ஒற்றை தலைவலி ஏற்படும் ஆபத்து 3 மடங்கு அதிகம். மரபணு ரீதியாகவும் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. ஒற்றை தலைவலிக்கு பெண் பாலின ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் முக்கிய பங்கு வகிக்கிறது. மாதவிடாய் சுழற்சி முறை, கர்ப்ப காலத்தில் ஏற்படும் மாற்றம் போன்றவற்றால் ஒற்றை தலைவலி ஏற்படுகிறது” என்றார்.

ஆர்ட்டெமிஸ் மருத்துவமனையின் நரம்பியல் இயக்குநர் டாக்டர் சுமித் சிங் கூறுகையில், “உடலின் ஹார்மோன்களில் ஏற்படும் சுழற்சி மாற்றத்தால் ஒற்றை தலைவலி ஏற்படுகிறது. ஈஸ்ட்ரோஜன் எனப்படும் பெண் பாலின ஹார்மோன்களே ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் முக்கிய குற்றவாளிகள். மேலும் ஹார்மோன் மாத்திரைகளை உட்கொள்ளும் அல்லது கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தும் பெண்களிடையே ஒற்றை தலைவலி ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது” என்றார்.

பாதிப்பு கண்டறிதல்: மேதாந்தா தி மெடிசிட்டியின் நரம்பியல் தலைவர் வினய் கோயல் கூறுகையில், “ஒற்றை தலைவலி ஒரு பொதுவான தலைவலியாகும். இது ஆண்களை விட பெண்களையே அதிகமாக பாதிக்கிறது. மருத்துவர் அல்லது நரம்பியல் நிபுணரின் ஆலோசனையின் படி, ஒற்றை தலைவலியை கண்டறிவது நல்லது. ஒற்றை தலைவலியை கண்டறிவதற்கு, சில சமயங்களில் எம்.ஆர்.ஐ (MRI) போன்ற இமேஜிங் ஸ்கேன்கள் தேவைபடுகின்றன.

மருந்தில்லா சிகிச்சை: இதற்கு சிகிச்சை அளிக்க பல நுட்பங்கள் உள்ளன. ஒற்றை தலைவலியை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கு போதுமான சிகிச்சை அளிக்க வேண்டும்” என்று கூறினார். பெங்களூர் அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த நரம்பியல் ஆலோசகர் டாக்டர் ஜே.பி அகடி, “மருந்து இல்லாமல், ரிமோட் எலட்ரிக்கல் நியூரோமோடுலேஷன் (REN - Remote Electrical Neuromodulation) போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஒற்றை தலைவலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கின்றன” என்று கூறினார்.

இதையும் படிங்க:இ-சிகரெட் பயன்படுத்துவதால் இப்படி ஒரு பாதிப்பா? அமெரிக்க ஆய்வு கூறுவது என்ன?

Last Updated : Apr 2, 2024, 4:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details