குளிர்காலம் வந்துவிட்டது என்றாலே, குளிரில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள ஜாக்கெட், சாக்ஸ், தொப்பி, போர்வை, ஹீட்டர் உள்ளிட்ட பலவற்றை நம்பியிருப்போம். அதிலும், குறிப்பாக இரவில் குளிர்ந்தால், அவ்வளவு தான்..தூக்கமே போய்விடும். இதற்காகவே, இரவில் குளிரை எதிர்த்துப் போராட பலர் கை, கால்களில் சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்குவார்கள்.
கால்களில் சாக்ஸ் அணிந்துகொண்டு தூங்குவது, நல்ல தூக்கத்தை ஏற்படுத்தினாலும், பல உடல்நலப் பிரச்சினைகளை வழிவகுக்கும் என்று பயோடெக்னாலஜி தகவல்களுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்குவதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? என்பதை பார்க்கலாம் வாங்க..
சாக்ஸ் அணிந்து தூங்குவதால் ஏற்படும் ஆபத்துக்கள்:
- இரத்த ஓட்டத்தை குறைக்கும்
- காலில் உள்ள காயம் ஆறுவதை தாமதப்படுத்தும்
- இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தும், இதனால் இருதய பிரச்சனை ஏற்படும்
- சரும பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்
- வியர்வை அதிகமாகி பூஞ்சை தொற்று ஏற்படலாம்
- தோலை பாதித்து கால்களில் வலியை உண்டாக்கும்
- பாக்டீரியா தொற்று ஏற்படலாம்
பொதுவாக, இரவு தூங்கும் போது கால்களில் குளிர்தன்மையை உணர்வது தூக்கத்தின் தரத்தை பாதிக்கும் என்பதை அனைவரும் அறிந்ததே. அதற்காக சாக்ஸ் அணிந்தாலும், இரவு முழுவதும் சாக்ஸ் அணிவதால், ஒவ்வாமை மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இது, காலப்போக்கில் தோல் புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கூடுதலாக, மிகவும் இறுக்கமான காலுறைகளை அணிவது, இரத்த ஓட்டத்தின் சுழற்சியை தாமதப்படுத்தும். மேலும், இது நரம்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்தி இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் எனவும் கூறுகின்றனர்.
இரவில் சாக்ஸ் அணியாமல் இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது எனவும் ஆனால் அதைத் தவிர்க்க முடியாதவர்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். உல்லன் சாக்ஸுக்கு பதிலாக காட்டன் சாக்ஸ் அணியலாம். மேலும், இறுக்கமான காலுறைகளை அணிவதையும் தவிர்க்க வேண்டும்.