புதுடெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் மகா விகாஸ் அகாதி கூட்டணியில் உள்ள சிவசேனா (உத்தவ் தாக்ரே பிரிவு), தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் பிரிவு) ஆகியவற்றுக்கு இடையே கருத்து வேறுபாடு அதிகரித்த நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை ஆதித்ய தாக்ரே சந்தித்துப் பேசினார்.
இன்று மாலை ராகுல் காந்தியை, ஆதித்ய தாக்ரே சந்தித்துப் பேசினார். அப்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொண்டது குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். மேலும் கூட்டணிக்குள் எழுந்துள்ள அதிருப்தி குறித்தும், மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஷிண்டேவுக்கு விருது வழங்கும் விழாவில் சரத்பவார் பங்கேற்றது குறித்தும் தமது அதிருப்தியை ராகுல் காந்தியிடம் ஆதித்ய தாக்ரே கூறியிருக்கிறார்.
புனே நகரில் செயல்படும் தன்னார்வ அமைப்பு ஒன்று துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு மகாத்ஜி ஷிண்டே ராஷ்ட்ர கௌரவ புரஸ்கார் விருதை வழங்கியது. அண்மையில் நடைபெற்ற விழாவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஷிண்டேவுக்கு இந்த விருதினை வழங்கினார். உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா கட்சியை உடைத்து வெளியேறி பாஜகவுக்கு ஆதரவு தந்த ஷிண்டேவை உத்தவ் தாக்ரே உள்ளிட்டோர் எதிரியாக கருதுகின்றனர்.
இதையும் படிங்க: தமிழக அமைச்சர்கள் இலாகா மாற்றம்.. அமைச்சர் பொன்முடிக்கு கூடுதல் பொறுப்பு!
இந்த நிலையில் எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள சரத்பவார், ஷிண்டேவுக்கு விருது வழங்கியது உத்தவ் தாக்ரேவுக்கு அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இது குறித்து பேசியுள்ள உத்தவ் தாக்ரேவின் மகன் ஆதித்ய தாக்ரே, "மகாராஷ்டிர மாநிலத்துக்கு எதிரானவர்கள் தேச விரோதிகள். இது போன்ற நேர்மைக்கு மாறானவர்களை நாம் கவுரவிக்கக் கூடாது. இது நமது கொள்கைக்கு எதிரானது. என்னால் அவரது(சரத்பவார்) கொள்கைகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை," என்றார்.
ராகுல் காந்தியை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலையும் ஆதித்ய தாக்ரே சந்தித்துப் பேச உள்ளார். அப்போது டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து இருவரும் விவாதிப்பார்கள் என தெரிகிறது. டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் 13 தொகுதிகளில் ஆம் ஆத்மி தோற்பதற்கு காங்கிரஸ் காரணமாக ஆகி விட்டது என ஆம் ஆத்மி கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.