தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

சிகரெட் பழக்கம் இல்லாதவர்களுக்கும் சுவாசப் பிரச்சனை! அச்சுறுத்தும் PM 2.5 - air pollution

AIR POLLUTION: காற்று மாசுபாட்டால் மரணத்தையும் விளைவிக்கும் ஆபத்து கொண்ட PM 2.5 துகள்கள் என்றால் என்ன? அவற்றின் ஆபத்தான பின்விளைவுகள் என்ன? என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

காற்று மாசு விளக்கப் படம்
காற்று மாசு விளக்கப் படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 20, 2024, 9:39 AM IST

ஹைதராபாத்:இந்தியாவில் காற்று மாசு குறைவான நகரங்கள் என கருதப்படும் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களிலும் காற்று மாசால் ஏற்படும் மரணங்கள் ஏற்படுவதாக அண்மையில் வெளியான ஆய்வறிக்கை குறிப்பிட்டது. இந்த மரணங்களுக்கு முக்கிய காரணியாக PM 2.5 எனப்படும் நுண்துகள்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன.

PM 2.5 என்றால் என்ன? நமது உடல்நலத்தை எப்படி பாதிக்கிறது?:PM 2.5 என்பது சுற்றளவு 2.5 மைக்ரோ மீட்டருக்கும் குறைவாகக் கொண்ட நுண்துகள்களாகும். புரியும்படி சொல்வதானால் மனிதனின் தலை முடியைக் காட்டிலும் 28 மடங்கு சிறிய துகள்களாகும். மனிதனின் தலைமுடி சுமாராக 70 மைக்ரோ மீட்டர் சுற்றளவு கொண்டது. இந்த நுண்துகள்கள் சுவாசத்தின் போது நுரையீரலுக்குள் நேரடியாகச் சென்று ரத்த ஓட்டத்திலும் கலந்துவிடுகின்றன. இந்த துகள்களை உருவாக்கும் காரணிகளாக பல்வேறு செயல்பாடுகள் உள்ளன. எந்த ஒரு எரிபொருளையும் எரித்து புகை உருவாகும் போது, அதில் PM 2.5 துகள்கள் இருக்கும். வாகன புகை, தொழிற்சாலை புகை மற்றும் வீடுகளில் அடுப்பெரியும் போது வெளியாகும் புகையிலும் இந்த நுண்துகள்கள் இருக்கும்.

குறைந்த காலத்தில் இந்த நுண்துகள்களை சுவாசித்தாலும் ஆபத்தான உடல்நல பாதிப்புகளை உருவாக்கும் என்பது ஆதாரத்துடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மிதமான அளவு அல்லது அதிக புகையை குறைந்த காலத்தில் சுவாசித்தாலும். குறைந்த அளவிலான புகையை நீண்ட காலத்திற்கு சுவாசித்தாலும் இவை ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவையாக உள்ளன.

PM 2.5 என்றால் என்ன? (Credit - ETV Bharat)

சுவாச மண்டல பிரச்சனைகள்: PM 2.5 மிக மோசமான சுவாச பிரச்சனைகளான, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அழற்சி (bronchitis), நுரையீரல் அடைப்பு (emphysema COPD), மற்றும பிற நுரையீரல் பிரச்சனைகளை உருவாக்குகிறது.

இதயத்தசை பிரச்சனைகள்: PM 2.5 அதிகமாக சுவாசிப்பதால் மாரடைப்பு, ஸ்ட்ரோக் மற்றும் இதர இருதயம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இயற்கைக்கு மாறான மரணங்கள்: ஏற்கெனவே மற்ற உடல்நல பிரச்சனைகள் உள்ளவர்கள் மற்றும் முதியோர் PM 2.5 துகள்களை குறுகிய காலத்திலோ, நீண்ட கால அடிப்படையிலோ சுவாசிக்கும் போது, மரணம் நேர்வதற்கான வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.

PM 2.5 ஏற்படுத்தும் பாதிப்புகள் (Credit - ETV Bharat)

மற்ற உடல்நல பிரச்சனைகள்: உயிராபத்து மட்டுமின்றி மற்ற உடல்நல பிரச்சனைகளான கண்கள் எரிச்சல், மூக்கு மற்றும் தொண்டையில் அசவுகரியம், நுரையீரலின் செயல்பாட்டை குறைத்தல், ஏற்கெனவே இருக்கும் உடல்நலக் கோளாறுகளை அதிகரிக்கச் செய்வது போன்ற ஆபத்துக்களும் உள்ளன. குறைப்பிரசவத்தில் குழந்தைகள் பிறப்பது, குறைந்த எடையுடன் பிறப்பது போன்றவற்றிற்கும் இது காரணமாக கூறப்படுகிறது. புதிய ஆய்வுகளின்படி நரம்பியல் சார்ந்த நோய்களுக்கும் PM 2.5 துகள்கள் காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.

PM 2.5 துகள்கள் எப்படி உருவாகின்றன?: வாகனத்தின் என்ஜினை நாம் ஸ்டார்ட் செய்யும் போது, சூடான காற்றுடன் எரிபொருளான பெட்ரோல் அல்லது டீசல் கலந்து உந்து விசையைக் கொடுக்கிறது. இந்த செயல்பாட்டின் போது உருவாகும் புகையில் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு போன்ற நச்சுவாயுக்களோடு PM 2.5 எனப்படும் நுண்துகள்களும் இருக்கும். முழுவதுமாக நிறைவடையாத என்ஜின் செயல்பாடு PM 2.5 துகள்களை அதிகமாக உருவாக்குகிறது. எரிபொருள் முழுமையாக எரியாத போது நுண்துகளாக மாறி வெளியேறுகிறது. இந்த PM 2.5 துகளில் கார்பன் போன்ற கனிமங்கள் உள்ளன. இவ்வாறு வெளியேறும் PM 2.5 துகள்கள் வளிமண்டலத்தில் உள்ள மாசுக்களுடன் கலந்து புதிய PM 2.5 துகள்களை உருவாக்குகின்றன. மோசமான சாலைகளில் எழும் புழுதி போன்றவை நிலைமையை மோசமடையச் செய்கின்றன.

உங்கள் உடலில் PM 2.5 ஏற்படுத்தும் தாக்கம் (Credit - ETV Bharat)

பெட்ரோல் வாகனங்களைவிட டீசல் மோசமா?: பெட்ரோல் வாகனங்களோடு ஒப்பிடுகையில் டீசல் வாகனங்கள் அதிக புகையை வெளியிடுகின்றன. இது தவிரவும் எரிபொருளாகவே டீசலில் அதிக அளவில் ஹட்ரோ கார்பன் கூட்டுப் பொருட்கள் உள்ளன. பெட்ரோல் வாகனங்களில் எரிபொருளானது முழுவதுமாக எரிக்கப்படுகிறது. நவீனபெட்ரோல் வாகனங்கள், catalytic converters போன்ற தொழில்நுட்பங்களின் உதவியால் PM 2.5 வெளியேற்றத்தை கட்டுப்படுத்துகின்றன.

இருந்தாலும் கூட பெட்ரோல் வாகனங்களில் சில குறைகள் உள்ளன. கார்பன் மோனோ ஆக்சைடு, போன்ற வாயுக்களின் வெளியேற்றம் நிகழ்கிறது. இந்த கார்பன் மோனோக்சைடு இதய பிரச்சனை உள்ளவர்களுக்கு ஆபத்தானதாகும். பெட்ரோல் என்ஜின்கள் VOCs எனப்படும் நச்சுவாயுக்களின் தொகுப்பை வெளியிடுகின்றன. இந்த வாயுக்களும் சுவாச மண்டல பிரச்சனைகளை உருவாக்கக் கூடியவையாக உள்ளன. எனவே பெட்ரோல் ஆனாலும டீசல் ஆனாலும் வாகனங்களின் புகையால் பாதிப்பு ஏற்படுத்துவதில் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல.

வாகனப்புகையைத் தவிர PM 2.5 கொடுக்கக் கூடிய மற்ற புகைகள்: வாகனங்கள் மட்டுமின்றி தொழிற்சாலைகளும், எரியூட்டும் செயல்முறைகளும் இந்த மாசுத் துகள்களை உருவாக்குகின்றன. விவசாய செயல்முறைகளான நிலத்தில் விடப்படும் நெற்கதிர்களின் அடிப்பகுதியை எரிப்பது, கட்டடங்களை இடிப்பது போன்றவையும் இந்த துகள்களின் அளவை அதிகரிக்கின்றன. விறகடுப்பைக் கொண்டு சமைப்பதும் PM 2.5 துகள்கள் அதிக எண்ணிக்கையில் உருவாவதற்கு காரணமாக கூறப்படுகிறது.

எப்படி தவிர்ப்பது?: அரசும் குடிமக்களும் தங்களின் கடமையை உணர்ந்து முயற்சி செய்தால் மட்டுமே இதனை எதிர்கொள்ள முடியும். வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியிடும் புகையை தடுக்க கடுமையான விதிகளை உருவாக்க வேண்டும். அரசு சார்பில் இந்த அபாயகரமான துகள்களின் தன்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தொழில்துறையில் மின்சார வாகனம் போன்ற பசுமையான ஆற்றலை பயன்படுத்தும் செயல்முறைகளை ஊக்கப்படுத்த வேண்டும். டீசல் மற்றும் பெட்ரோலை பயன்படுத்தும் வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

தனிப்பட்ட முறையில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் பயன்பாட்டைத் தவிர்த்து பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். குப்பைகளை மட்கும் குப்பை, மட்காத குப்பை என பிரித்து கொட்டுவதால் குப்பைக் கூடங்களிலிருந்து இத்தகைய வாயுக்கள் வெளியேறுவதைத் தவிர்க்கலாம்.

இதையும் படிங்க:பால் குடிப்பதால் 8 வயதிலே பூப்படையும் பெண்கள்? மரபணு மாற்றத்தால் இப்படிப்பட்ட விளைவுகளா?

ABOUT THE AUTHOR

...view details