சென்னை: 'நீரிழிவு கண்டறியப்பட்டதற்குப் பிறகு 10 ஆண்டுகளுக்குள் அல்லது அதற்கு முன்னதாகவே நீரிழிவின் காரணமாக கண் நோயின் ஏதாவதொரு வடிவத்தினால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்' என்கிறார் சென்னை டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் விட்ரியோ-ரெட்டினா துறையின் தலைவர் மற்றும் கிளினிக்கல் லீட் டாக்டர். மனோஜ் காத்ரி.
நீரிழிவு நோயாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், உலக நீரிழிவு தினம் வியாழக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில், நீரிழிவு நோயாளிகள் எதிர்கொள்ளும் மற்றுமொரு முக்கிய பிரச்சனையாக இருக்கும் கண் பிரச்சனை குறித்து பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் நேற்று தனது எக்ஸ் தளத்தில் விழிப்புணர்வு பதிவொன்றை பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்போது பார்வை பாதிக்கும்?:அந்த வகையில், இந்தியாவில் 101 மில்லியன் நீரிழிவு நோயாளிகளும் மற்றும் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் 136 மில்லியன் நபர்களும் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. நீரிழிவு நிலையிலுள்ள நபர்களுள் சுமார் 10 சதவீதம் (ஏறக்குறைய 10 நபர்களுள் 1 நபர்), நீரிழிவு கண்டறியப்பட்டதற்குப் பிறகு 10 ஆண்டுகளுக்குள் அல்லது அதற்கு முன்னதாகவே நீரிழிவின் காரணமாக கண் நோயின் ஏதாவதொரு வடிவத்தினால் பாதிக்கப்படுகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.
மருத்துவர் மனோஜ் காத்ரி கூறுகையில், "கடுமையான பார்வைத்திறனிழப்பு அல்லது குருட்டுத்தன்மைக்குக்கூட இது வழிவகுத்துவிடும். எனினும், நீரிழிவு நோயாளிகளுள் பெரும் பகுதியினர் உரிய காலஅளவுகளில் கண் பரிசோதனைகளை செய்துகொள்வதில்லை.
இதயத்தை அல்லது சிறுநீரகத்தை நீரிழிவு நிலை பாதிப்பதைப்போல கண்களையும் அது பாதிக்கும் என்பது குறித்து போதுமான விழிப்புணர்வு அவர்களிடம் இல்லாததே இதற்குக் காரணம். விழித்திரை அழிவு நோய் (ரெட்டினோபதி) என்பது தொடக்கத்தில் அறிகுறிகள் எதையும் வெளிப்படுத்துவதில்லை" என சுட்டிக்காட்டியுள்ளார்.
நீரிழிவு ரெட்டினோபதி (Diabetic Retinopathy):நீரிழிவு சார்ந்த விழித்திரை அழிவு நோய் (ரெட்டினோபதி), கண்களில் இரத்த நுண் நாளங்கள் இயல்புக்கு மாறாக அதிகமாக வளர்ச்சியடைந்து கண்களுக்குள் வீக்கத்தை/இரத்தக்கசிவை விளைவிப்பது, திரவங்களை தடுப்பது, விழித்திரையையும், விழி நரம்புகளையும் சேதப்படுத்துவது மற்றும் விழித்திரையை இடம்பெயரச் செய்வது ஆகியவற்றின் மூலம் பார்வையையே பாதிக்குமாறு செய்துவிடும்.
Diabetic Retinopathy (Credit - Getty Images) அதனை தொடர்ந்து அவர் கூறுகையில், 'குறித்த காலஅளவுகளில் ஸ்கிரீனிங் சோதனை செய்துகொள்வதும் மற்றும் இந்த கண் கோளாறின் ஆபத்துகளை தொடக்க நிலையிலேயே கண்டறிவதும் நீரிழிவு வராமல் தடுக்க அல்லது நீரிழிவு நிலையை சரியாக நிர்வகிக்க கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு உதவக்கூடும். வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வது மற்றும் ஆரோக்கியமான முறையில் உணவுகளை உட்கொள்வதன் வழியாக வகை 2 நீரிழிவு வராமல் தடுக்க முடியும் அல்லது உருவாவதை தாமதிக்குமாறு செய்யமுடியும்.
- இரத்த சர்க்கரை, இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது
- உடல் எடையை குறைப்பது
- சமச்சீரான உணவை உண்பது
- தவறாமல் உடற்பயிற்சி செய்வது
- மன அழுத்தமற்ற வாழ்க்கையை வாழ்வது போன்ற நடவடிக்கைகள் நீரிழிவு நோயாளிகள் அவர்களது பார்வைத்திறனை பாதுகாப்பதற்கு பெரிதும் உதவக்கூடும்' என்றார்
சிகிச்சை முறை: நீரிழிவு சார்ந்த விழித்திரை அழிவு நோயை, விழித்திரை மற்றும் விழிப்புள்ளியை விரிவாக பரிசோதிப்பதன் வழியாக கண்டறியமுடியும். நீரிழிவு சார்ந்த விழித்திரை அழிவு நோய்க்கான சிகிச்சையில் கசிவு ஏற்பட்ட இரத்த நுண் குழல்களில், அழற்சியையும் மற்றும் அளவுக்கு மீறிய நுண் குழல்களின் வளர்ச்சியையும் குறைப்பதற்கு கண்களுக்குள் மருந்துகளை உட்செலுத்தப்படும்.
மேலும், விழித்திரை விலகல் அல்லது இரத்தக்கசிவை சரிசெய்ய கண்ணின் பின்புறத்தில் ஜெல் போன்ற திரவத்தை அகற்றுவது மற்றும் மாற்றுத்திரவத்தை உட்செலுத்துவதற்கான அறுவைசிகிச்சை செய்யப்படும். கண் பார்வையை பாதுகாக்க நீரிழிவு நோயாளிகள் ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்வது அவசியம்.
இதையும் படிங்க:கண் தானம் இவர்கள் எல்லாம் செய்யக்கூடாதா?...பரவும் கட்டுக்கதைகளுக்கு முற்றுப்புள்ளி!
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்