பல நூற்றாண்டுகளாக இந்திய கலாச்சாரத்தில் விரதங்களுக்கு என முக்கிய அம்சம் உண்டு. இந்து மதத்தில் சஷ்டி, வைகுண்ட ஏகாதசி, மகா சிவராத்திரி போன்ற நாட்களில் பலரும் உண்ணாவிரதம் இருப்பார்கள். அதே போல, இஸ்லாத்தில் ரமலான் நோன்பு போன்ற விரதங்களை பலர் பின்பற்றுவார்கள்.
ஆனால், இப்படி விரதங்கள் இருக்கும் போது அவர்களது உடலில் என்ன வகையான மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? விரதம் இருப்பதால், உடலில் சேமித்து வைத்திருக்கும் கொழுப்பு ஆற்றலுக்கு பயன்படுத்த உதவினாலும், இதில் பல ஆபத்துகளும் இருக்கலாம் என ஆய்வுகள் எச்சரிக்கிறது. அதன்படி, விரதம், நோன்பு போன்றவற்றை கடைப்பிடிப்பவர்களுக்கு உடலில் ஏற்படும் மாற்றத்தை பற்றி பார்க்கலாம்.
முதல் 6 மணி நேரத்தில்...நீங்கள் விரதம் இருக்க தொடங்கிய முதல் 6 மணி நேரத்தில், நீங்கள் கடைசியாக உண்ட உணவை உடல் ஜீரணிக்க தொடங்கும். அதில் சேமிக்கப்பட்ட குளுக்கோஸ் ஆற்றலாகப் பயன்படுத்தப்படும். பின்னர், விரதத்தின் மீதமுள்ள நேரம் முழுவதும் உங்கள் உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்புகள் ஆற்றலுக்காகப் பயன்படுத்தப்படும் என ஹார்வர்ட் ஹெல்த் பப்ளிஷிங் வெளியிடப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதுவே, 24 மணி நேரத்திற்கு மேலாக விரதம் தொடர்ந்தால், உடலில் சேமிக்கப்பட்ட புரதங்கள் ஆற்றலாக மாறத் தொடங்கலாம்.
கோப்புப்படம் (Credit - Pexels)
விரதத்தால் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
தலைவலி பிரச்சனை:அதிக நேரம் சாப்பிடாமல் விரதம் இருப்பது தலைவலியை ஏற்படுத்தும். விரதம் இருக்கும் நாளின் முடிவில் மயக்கம், குமட்டல் போன்றவற்றை உணர வாய்ப்புள்ளது, அல்லது கடுமையான தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உடலில் எந்த சக்தியும் இல்லாதது மற்றும் சத்துக்கள் குறைப்பாடு காரணமாக இது ஏற்படுகிறது. நாம் தினசரி எடுத்துக்கொள்ளும் உணவில் பெரும்பாலும் கார்போஹைட்ரேட்கள் நிறைந்துள்ளன. இதில் இருந்து உருவாகும் ஆற்றல் நாள் மூழுவதும் நம்மை சீராக செயல்பட உதவுகிறது. விரதத்தின் போது கார்போஹைட்ரேட்கள் குறைபாடு ஏற்படுவதால், மூளைக்கு தேவைப்படும் ஊட்டச்சத்தில் பற்றாக்குறை ஏற்பட்டு தலைவலிக்கு வழிவகுக்கும்.
நீரிழப்பு: சிலர் உண்ணாவிரதத்தின் போது தண்ணீர் கூட குடிக்காமல் இருப்பார்கள். இது நீரிழப்பை ஏற்படுத்தி பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். தண்ணீர் சம்பந்தப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்ளத போது கல்லீரலில் உள்ள குளுக்கோஸ் அல்லது க்ளைகோஜன் அதிகப்படியாக பயன்படும். இது உடலில் இயல்பு செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும்.
சோடியம் குறைபாடு: விரதம் நன்மைகளை தந்தாலும், இதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் தடைப்படுகிறது. குறிப்பாக, உடலில் எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு தாதுக்கள், திரவங்கள் மற்றும் சோடியம் குறைப்பாட்டை ஏற்படுத்தும். உடலில் சோடியம் உயிரணுக்கள் மற்றும் அதை சுற்றியுள்ள திரவத்தின் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.
இதில் கவனம் செலுத்துங்கள்:
விரதத்தின் போது உடலை நீரேற்றமாக வைத்திருக்க ஏரளமாக தண்ணீர், மோர், இளநீர், பழச்சாறுகளை எடுத்துக்கொள்ளவும். அல்லது பழ வகைகளை உண்ணலாம்.
இவை உடலை நீரேற்றமாக வைத்திருந்து, தலைச்சுற்றல், சோர்வு, தலைவலி, மூட்டுவலி போன்ற சிக்கலை தடுத்து விரதத்தை ஆரோக்கியமாக கடைப்பிடிக்க உதவுகிறது.
கோப்புப்படம் (Credit - Pexels)
நன்மைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்..
எடை இழப்பு:வாரத்தில் 1 அல்லது 2 நாள் விரதம் இருப்பதால் குறைவான கலோரிகள் மட்டுமே உட்கொள்ளப்படும். மேலும், 24 மணி நேர விரதத்தினால் வரும் ஆற்றல் கட்டுப்பாடு உங்கள் வளர்சிதை மாற்றத்திற்கு பங்களித்து எடை இழக்க உதவும் என சர்வதேச அமைப்பு நடத்திய ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை அளவை நிர்வகுக்கும்: உண்ணாவிரதம் உங்கள் உடல் கொழுப்பு மற்றும் சர்க்கரையை உடைக்கும் முறையை மேம்படுத்த உதவும். உங்கள் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் இந்த மாற்றங்கள் நீரிழிவு மற்றும் இருதய நோய் போன்ற நிலைமைகளை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்க உதவும். இதனால் இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.