உடலில் யூரிக் அமிலம் அதிகரித்தால் மூட்டு வீக்கம் மற்றும் கீல்வாதம் போன்ற நிலமைகளுக்கு வழிவகுக்கும். உடலில் யூரிக் அமில அளவை சரியான அளவில் பாராமரிக்க சமச்சீரான உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, நட்ஸ் மற்றும் உலர்ந்த பழங்களில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் யூரிக் அமில அளவைக் குறைக்க உதவுகிறது. அதன்படி, யூரிக் அமில அளவை குறைக்கும் நட்ஸ் வகைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க..
வால்நட்ஸ்: இதில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இன்ஃப்ளமேஷன் மற்றும் வலியைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது யூரிக் அமிலத்தை அகற்றவும், சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும் என்றும் கூறப்படுகிறது.
- எப்படி உட்கொள்வது? : தினசரி 2 முதல் 3 வால்நட்ஸை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அப்படியே அல்லது ஸ்மூத்திகள் மற்றும் சாலட்களுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்.
பிஸ்தா: பிஸ்தா பருப்புகளில் பாலிபினால்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளது. யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கும் வீக்கத்திற்கும் காரணமாக இருக்கும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராட பிஸ்தா உதவுகிறது. மேலும், இதில் உள்ள ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்த உதவியாக இருக்கிறது.
- உட்கொள்ளும் முறை: தினசரி காலையில் சுமார் 15 பிஸ்தா சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், அவற்றை வறுக்காமல், உப்பு சேர்க்காமல் சாப்பிட வேண்டும். உப்புடன் இதை உட்கொள்வது சிறுநீரக செயல்பாட்டில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் தன்மையை கொண்டுள்ளது.

பாதாம்: பாதாமில் உள்ள மெக்னீசியம் செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்துகிறது. இது உடலில் இருந்து யூரிக் அமிலத்தை நீக்கி சிறுநீரக செயல்பாட்டை அதிகரிக்கிறது. 2019 ஆம் ஆண்டு ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்ற இதழில் வெளியிடப்பட்ட "Almond consumption decreases uric acid levels in healthy adults" என்ற தலைப்பில் வெளியான ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது.
- எப்படி உட்கொள்வது?: தினசரி 5 முதல் 6 பாதாம் பருப்புகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து காலையில், வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இல்லையென்றால், பாலில் அல்லது ஓட்மீலில் கலந்து குடிக்கலாம்.
முந்திரி: முந்திரி மெக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும். இவை வீக்கத்தைக் குறைத்து செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில், பியூரின் அளவு குறைவாக இருப்பதால் யூரிக் அமிலம் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
- எப்போது சாப்பிட வேண்டும்: காலையில் 4-5 முந்திரிகளை உப்பு சேர்க்காமல் சாப்பிட வேண்டும். முடிந்தால், மற்ற நட்ஸ்களுடன் சேர்த்து சாப்பிடுவது சீரான ஊட்டச்சத்துக்களை வழங்கும்.

பேரிச்சம்பழம்: இதில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை இரண்டும் யூரிக் அமிலத்தை வெளியேற்றி சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும், இவை இயற்கையான ஆற்றலை வழங்குகிறது.
- எப்போது சாப்பிட வேண்டும்: 1-2 பேரீச்சம்பழங்களை காலையில் நேரடியாக சாப்பிட வேண்டும் அல்லது ஸ்மூத்திகள் மற்றும் சாலட்களில் சேர்க்கலாம் என்று கூறப்படுகிறது.
பிரேசில் நட்ஸ்: இன்ஃப்ளமேஷனை குறைத்து ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் அதிகரிக்கும் செலீனியம் பிரேசில் நட்ஸில் அதிகம் உள்ளது. இது யூரிக் அமிலத்தை வெளியேற்றி சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
- எப்போது சாப்பிட வேண்டும்: தினமும் 1-2 பிரேசில் நட்ஸ்களை எடுத்துக்கொள்ளலாம். இருப்பினும், இவற்றை அதிகமாக உண்ணக்கூடாது.
இதையும் படிங்க: உடலில் யூரிக் அமிலம் உற்பத்தியை குறைக்கணுமா? இந்த 5 சூப்பர் ஃபுட்ஸ் கட்டாயம் உதவும்!
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.