சென்னை:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 225 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். சிலர் உடல்நலம் தேறி வீடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே சாராயம் வாங்கி குடித்துவிட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அவர் தற்போது பூரண குணம் அடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் இது குறித்து ஈடிவி பாரத் சார்பில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவத்துறை தலைவர் ஷேக் சுலைமானிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அப்போது பேசிய அவர், "மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்த நபர்கள், உயிர் தப்புவதே கடினம்தான் எனவும், மிகுந்த போராட்டத்தை சந்திக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டார்.
அவர்களின், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் மூளை நரம்புகள் என அனைத்தும் பாதிக்கப்படும்போதே உடல்நல கோளாறு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு வர வேண்டிய சூழல் உருவாகிறது என தெரிவித்த மருத்துவர், சாராயம் மட்டும் அல்ல மது என்ற வார்த்தையை மறந்துவிட வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார்.