தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

விநாயகர் சதுர்த்திக்கு பஞ்சு போன்ற பூரண கொழுக்கட்டை செய்து அசத்த வேண்டுமா? இந்த குறிப்பை மறந்துடாதீங்க!! - Pooranam kolukattai recipe - POORANAM KOLUKATTAI RECIPE

Pooranam kolukattai recipe: விநாயகருக்கு மிகவும் பிடித்த பூரண கொழுக்கட்டையை நாமும் செய்து சாப்பிடலாமே? சுலபமாக, பக்குவமாக பூரண கொழுக்கட்டை செய்வது எப்படி என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - GETTY IMAGES)

By ETV Bharat Health Team

Published : Sep 5, 2024, 11:10 AM IST

ஹைதராபாத்:உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி இந்தாண்டு செப்டம்பர் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்து என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது விதவிதமான கொழுக்கட்டையும் பலகாரமும் தான். அப்படி,இந்த விநாயகர் சதுர்த்திக்கு, விநாயகருக்கு பிடித்த பூரண கொழுக்கட்டையை செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

  • அரிசி மாவு (கடைகளில் இடியாப்பம்/கொழுக்கட்டை மாவு) - 2 கப்
  • உப்பு - தேவையான அளவு
  • கொதித்த தண்ணீர் - 2 கப்

பூரணம் செய்ய தேவையான பொருட்கள்:

  • துருவிய தேங்காய் - 1 கப்
  • பொட்டுக்கடலை மாவு - 1/2 கப்
  • வெல்லம் கரைத்தது - 3 ஸ்பூன்

கொழுக்கட்டை மாவு செய்யும் முறை:

  • அரிசி மாவில் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும். பின்னர், மாவில் கொஞ்சம் கொஞ்சமாக கொதிக்கும் தண்ணீரை ஊற்றி கரண்டியால் நன்றாக கலந்து விடுங்கள். (குறிப்பு: வெதுவெதுப்பான அல்லது பச்சை தண்ணீரை பயன்படுத்தக்கூடாது).
  • அதிகமாக தண்ணீர் சேர்க்காமல் தேவைக்கு ஏற்ப சேர்த்தால் மாவு கையில் ஒட்டாமல் மிருதுவாக வரும், இது தான் பக்குவம். இப்போது மாவு வெதுவெதுப்பாக இருக்கும் போதே ஒன்று சேர்த்து நன்றாக உருட்டி மூடி போட்டு தனியாக வைத்து விடுங்கள்.

[குறிப்பு:கடையில் வாங்கிய மாவு என்றால் இரண்டு கப் மாவிற்கு இரண்டு கப் தண்ணீர். வீட்டில் செய்த புது மாவு என்றால் ஒரு ஒன்றரை கப் தண்ணீர் தேவைப்படும்]

பூரணம் செய்வது எப்படி?:

துருவிய தேங்காயில் கடலை மாவை சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். இதில், கரைத்து வைத்த வெல்லத்தை ஊற்றி நன்கு பிசையுங்கள். (நாட்டு சர்க்கரை பயன்படுத்தினால் 4 ஸ்பூன்). விருப்பத்திற்கேற்ப, ஏலக்காய் பொடி, எள்ளு, வறுத்த கடலையை இந்த பூரணத்தில் சேர்த்துக்கொள்ளலாம்). இப்போது, பூரணம் ரெடி.

பூரண கொழுக்கட்டை செய்முறை:

  • முதலில், கையில் எண்ணெய் தடவி, கொழுக்கட்டைக்கு பிசைந்து வைத்த மாவைப் தேவையான அளவில் எடுத்து உருண்டையாக பிடியுங்கள்.
  • இப்போது மாவை உள்ளங்கையில் வைத்து அழுத்தம் கொடுங்கள்.
  • பின்னர், மாவின் ஓரத்தில் நன்றாக அழுத்தி விடுங்கள். இப்போது மாவின் நடுவில் குழி விழுந்து ஒரு சட்டி போல் இருக்கும்.
  • இப்போது, இந்த மாவின் நடுவில் தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை வைத்து சுற்றியுள்ள மாவை ஒன்று சேர்க்கவும்.
  • இதை உருண்டையாக பிடிக்க நினைத்தால், மாவில் எந்த விரிசலும் இல்லாமல் நன்றாக உருட்ட வேண்டும். இப்போது, அனைத்தையும் இதே போல தயார் செய்து என்னை தடவிய தட்டில் வைக்கவும்.
  • இட்லி பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, தண்ணீர் கொதித்து ஆவி வந்தவுடம் இட்லி தட்டில் கொழுக்கட்டையை வைத்து மூடி வைக்கவும். (குறிப்பு: நீராவி வெளியில் வந்த பின்னர் கொழுக்கட்டையை வைத்தால் மென்மையாக இருக்கும்)
  • மிதமான தீயில் 5 நிமிடங்கள் வேகவைத்து எடுத்தால் விநாயகருக்கு பிடித்த பூரண கொழுக்கட்டை தயார்.

இதையும் படிங்க:இட்லி/தோசை மாவு புளித்து விட்டதா? இதை கொஞ்சம் கலந்து பாருங்க..சக்சஸ் தான்!

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் ஜோவர் (சோள) ரொட்டி செய்வது எப்படி?...சப்பாத்திக்கு பெஸ்ட் ஆல்டர்னேட்டிவ் இதான்!

ABOUT THE AUTHOR

...view details