சென்னை:ஆஹா சாக்லெட்டா கொண்டா என பிடுங்கி வாயில் போட்டு சாப்பிடும் அளவுக்கு அதன் மீது அதீத பிரியம் உள்ளவரா நீங்கள்.? ஹார்ட் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவரா நீங்கள்.? உணவில் கலப்படம் செய்து விற்பனை செய்தால் கொந்தளிப்பவரா நீங்கள்? உணவுப்பொருட்களை புதிதாக வீட்டியேலே தயாரித்து உட்கொள்வதில் ஆர்வம் கொண்டவரா நீங்கள்? கட்டாயம் இதை படியுங்கள். உங்கள் பல்வேறு கேள்விகளுக்கான பதில் இங்கே இருக்கிறது.
டார்க் சாக்லெட் என கேட்டிருப்போம் அது எப்படி இருக்கும் என ஒரு சிலர் சுவைத்தும் பார்த்திருப்போம். இந்த டார்க் சாக்லெட்டில் ஏராளமான உடல்நல ஆரோக்கியத்துடன் தொடர்புடைய சத்துக்கள் அடங்கி இருக்கிறது என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். இருதயத்திற்கும், மூளைக்கும், தோல் ஆரோக்கியத்திற்கும், தசையில் இருக்கும் திசுக்களுக்கும் என ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தில் டார்க் சாக்லெட் முக்கியப்பங்காற்றுகிறது.
இதில், இரும்பு சத்து, சிங்க், காப்பர், மேக்னீசியம். பாஸ்பரஸ் உள்ளிட்டவையும் குறிப்பாக ஃப்ளேவநோல்ஸ் மற்றும் பாலிபிநோல்ஸ் ஆகியவை அடங்கி உள்ளன. இவை உடலில் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தி நல்ல கொழுப்பை உயர்த்தவும், மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும் செய்கிறது. இதனால் மாதவிடாய் கால மூட் ஸ்விங் மட்டும் அல்ல ஆண்களும் அசவுகரியமான மனநிலை ஏற்படும்போது இந்த டார்க் சாக்லெட்டை உட்கொள்ளலாம். இப்படி இன்னும் பல்வேறு நன்மைகள் அடங்கிய டார்க் சாக்லேட்டுகளை.. போலியாக தயார் செய்து பல்வேறு நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன.
கடைகளில் விற்கப்படும் போலி டார்க் சாக்லேட்:பல்வேறு கடைகளில் டார்க் சாக்லெட் என்ற பெயரில் சாதாரண சாக்லேட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதை வாங்கி நாம் உட்கொள்ளும்போது காலப்போக்கில் நீரிழிவு நோய், உடல் எடை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு அது வழிவகை செய்யும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
டார்க் சாக்லெட் என்றால் குறைந்த பட்சம் 70 விழுக்காடாவது கொக்கோ இருக்க வேண்டும் அதற்கும் குறைவாக இருந்தால் அது சாதாரண சாக்லேட்டாகவே கருதப்படும். அது மட்டும் இன்றி டார்க் டாக்லேட் என விற்கப்படும் பல்வேறு பிரேண்டுகளில் பின்னால் போடப்பட்டிருக்கும் கலோரியின் அளவு 100 கிராமுக்கு 559-ஆக உள்ளது.
அது மட்டும் இன்றி மில்க் சோலிட்ஸ், வெஜிடபிள் ஆயில், வனஸ்பதி மற்றும் அதிக அளவில் சர்க்கரை சேர்க்கப்படுகிறது. இது உண்மையில் தரமான டார்க் சாக்லேட் இல்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.