சென்னை: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை இந்திய தேர்தல் ஆணையம் விசாரிக்க இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால், நிலுவையில் உள்ள வழக்குகள் முடியும் வரை அ.தி.மு.க-வுக்கு மக்களவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என சூர்யமூர்த்தி, ராம்குமார், ஆதித்யன் உள்ளிட்ட 6 பேர் தனித்தனியாக இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர்.
இதையடுத்து, இரட்டை இலை சின்னம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் விசாரனைக்கு தடை விதிக்கக்கோரி அ.தி.மு.க சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர். சுப்ரமணியன், சி. குமரப்பன் அமர்வில் இன்று (ஜனவரி 9) வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அதிமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை தேர்தல் ஆணையம் கண்காணிக்க முடியாது. கட்சியில் இல்லாதவர்கள், நீக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் அதன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க முடியாது என்று தனது வாதத்தை முன்வைத்தார்.
மேலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் போல விசாரணை செய்யும் அதிகாரம் இல்லை. அ.தி.மு.க தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது விசாரணை செய்வது, நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணையை பாதிக்கும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க |
தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், "வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, தேர்தல் ஆணையம் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? 4 வாரத்தில் முடிவு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் கடந்த விசாரணையில் தெரிவித்தது. வழக்கு நிலுவையில் இருக்கும் போது நடவடிக்கை எடுக்க முடியுமா?," எனக் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்று கூறிய நீதிமன்றம், தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.