சென்னை: பிரபல நடிகர் சிபி சத்யராஜ் நடித்துள்ள 'டென் ஹவர்ஸ்’ (Ten Hours) படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் சத்யராஜ் மகனான சிபி சத்யராஜ், கடந்த 2003ஆம் ஆண்டில் ஸ்டுடண்ட் நம்பர் 1 (Student number 1) திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அதன்பின் ஜோர், வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ், லீ, நாணயம் ஆகிய படங்களில் நடித்தார்.
இந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், சிபி சத்யராஜ் நடித்த 'நாய்கள் ஜாக்கிரதை' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் கடைசியாக இவர் நடித்த வட்டம், மாயோன், வால்டர் ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன. இந்நிலையில் இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடித்துள்ள ‘டென் ஹவர்ஸ்’ திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள டென் ஹவர்ஸ் படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.
இந்த படத்தை பைவ் ஸ்டார் மற்றும் டுவைன் நிறுவனங்கள் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஜெய் கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் டென் ஹவர்ஸ் படத்தின் டிரெய்லரை தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். ஒரு இரவில் 10 மணி நேரத்திற்குள் பல கொலைகள் நடக்கிறது, அந்த கொலையாளியை சிபி சத்யராஜ் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து எவ்வாறு கண்டு பிடிக்கிறார் என்பதே இப்படத்தின் மையக்கதையாகும்.
இதையும் படிங்க: ரஜினிகாந்த் பயோபிக் எடுக்க ஆசை, இந்தியன் 2 விமர்சனம் - மனம் திறந்த இயக்குநர் ஷங்கர்! - DIRECTOR SHANKAR ON RAJINI BIOPIC
விறுவிறுப்பான டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் டிரெய்லரை வெளியிட்டதற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜிற்கு நன்றி தெரிவித்த சிபி சத்யராஜ், தான் ’கூலி’ படத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். வரும் பொங்கல் பண்டிகைக்கு வணங்கான், கேம் சேஞ்சர், காதலிக்க நேரமில்லை, தருணம், டென் ஹவர்ஸ் என 10 திரைப்படங்கள் வெளியாகிறது. இதனால் திரையரங்குகள் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.