தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

மாதவிடாயின்போது ஏன் கடுமையான வலி மற்றும் மன உளைச்சல் ஏற்படுகிறது? காரணம்.. தீர்வு..! - How to control Menstrual Cramps - HOW TO CONTROL MENSTRUAL CRAMPS

மாதவிடாய் நாட்களின்போது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் வயிற்று வலி, இடுப்பு வலி மற்றும் கால் வலியால் அவதிப்படுவர். இதற்கு நாட்டு மருத்துவத்தில் சில சிகிச்சைகள் மேற்கொள்வதன் மூலம் வலியை குறைக்கலாம்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 25, 2024, 1:33 PM IST

Updated : Apr 26, 2024, 3:21 PM IST

சென்னை:மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என கேட்டிருப்போம். ஆனால் இந்த மாதவிடாய் நாட்களில் பெண்ணாக ஏன் பிறந்தேன் என நினைக்காத பெண்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு மாதவிடாய் நாட்களில் பெண்கள் படும் வேதனை கொடிது.

உடல் ரீதியாக அந்த நாட்களில் பெண்களுக்கு கால் வலி, இடுப்பு வலி, வயிற்று வலி, தலைவலி என இன்னும் என்னென்ன வலி உடலில் இருக்கிறது என்பதை சொல்ல முடியாத அளவுக்கு அவஸ்தை படுவார்கள். இது ஒரு பக்கம் இருக்க, மன ரீதியாக அந்த நாட்களில் மன அழுத்தம், குழப்பம், சோகம், கோவம், சோர்வு என சொல்லிக்கொண்டே போகலாம்.

இது அனைத்து பெண்களுக்கும் எதிர்கொள்ளும் இயற்கையான, பொதுவான ஒன்றுதான் என்றாலும், பலர் இதனால் தங்கள் இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ள முடியாமலும், பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலக வேலைகளில் கவனம் செலுத்த முடியாமலும் திணறுவார்கள். இது குறித்து சென்னையில் உள்ள மகப்பேறு மருத்துவர் கிருத்திகா மீனாட்சி கூறிய தகவல்களை பார்க்கலாம்.

மாதவிடாய் என்றால் என்ன?சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்க உடல் தன்னை பராமரிக்கும் செயலே மாதவிடாய். ஒவ்வொரு மாதமும் வலது ஓவரியில் 50 முட்டைகளும் இடது ஓவரியில் 50 முட்டைகளும் உருவாகும். அதில் இருக்கும் ஒரு முட்டை வளர்ந்து ஃபெலோபெய்ன் டியூபில் வந்து கரு உருவாவதற்காக காத்திருக்கும்.

அந்த நேரத்தில் ஒரு ஆணின் விந்தணு கிடைக்கும் பட்சத்தில் அது கருவாக உருவாக ஆரம்பிக்கும். இல்லை என்றால் அந்த கருமுட்டை தேவை இல்லை என்ற சிக்னல் மூளைக்கு அனுப்பப்பட்டு, என்டோமெட்ரியம் லைனிங் மொத்தமாக வெளியே தள்ளப்படும். இந்த செயல்தான் மாதவிடாய்.

இந்த நேரத்தில் உடலில் நடக்கும் மாற்றங்கள் என்ன? மாதவிடாய் நாட்கள் என்று கூறுவதை விட மாதவிடால் வருவதற்கு முந்தைய 3 முதல் 4 நாட்களுக்கு முன்பாகவே உடலின் பல இடங்களில் வலி மற்றும் மலம் கழிப்பதில் சிரம் உள்ளிட்டவை ஏற்படலாம். இதுபோன்ற அறிகுறிகள் அனைத்து பெண்களுக்கும் ஒரேமாதிரியாக இல்லாமல் வேறுபாட்டுடன் இருக்கும்.

அதனை தொடர்ந்து மாதவிடாய் வந்த பிறகு, வயிறு மற்றும் அடி வயிறு, கால் வலி மற்றும் கால் குடைச்சல், இடுப்பு வலி, முதுகு வலி, தலைவலி மேலும் சிலருக்கு வாந்தி உள்ளிட்டவை உடல் ரீதியாகவும், கோவம், மன உளைச்சல், எரிச்சர், சோகம், சோர்வு உணர்வு போன்றவை மன ரீதியாகவும் ஏற்படும். இவை அனைத்தும் உடலில் நடக்கும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் என்டோமெட்ரியம் லைனிஙை வெளியேற்ற உடல் மேற்கொள்ளும் பணியின் காரணமாக ஏற்படுகிறது.

வலியை கட்டுப்படுத்த மாத்திரைகள் உட்கொள்ளலாமா?வலியை கட்டுப்படுத்த வலி நிவாரணி மாத்திரைகள் இருக்கின்றன. சிலர் இந்த மாத்திரைகளை அவர்களாகவே மருந்து கடைகளில் இருந்து வாங்கி மாதவிடாய் வருவதற்கு முன்பு ஏற்படும் வலிக்கே போடுவார்கள். மேலும், அந்த மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்துவார்கள். இது ஆரோக்கியத்திற்கு நல்லதா என்ற அடிப்படையில் சித்த மருத்துவர் யோக வித்யா சில தகவல்களை குறிப்பிட்டிருந்தார்.

அதில், தொடர்ந்து வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல எனவும் பெண்கள் இதுபோன்ற செயல்களை ஊக்குவிக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், இந்த மாதவிடாய் குறித்து சித்தர் பல ஆண்டுகளுக்கு முன்பு பாடலாக எழுதியுள்ள நிலையில் நாட்டு மருந்துகளை உணவாக உண்டுவர வலியை கட்டுப்படுத்தவும், தங்கிக்கொள்ளவும் பலம் கிடைக்கும் என நாட்டு மருத்துவம் ஒரு ஆய்வு என்ற தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் வெளியிட்ட புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சித்தர்கள் எழுதிய பாடலில் மாதவிடாய் பிரச்சனைகள் என்னென்ன?

"கீழ் வயிற்றில் தூரமாம் சூளை கேழாய்

கெடி உண்டி மருத்துமே வாய் நீர் ஊறி

பால் வயிற்றில் செரித்த ஈரல் பற்றி

பக்கம் இன்றி சிரத்தோடு வயிறும் ஊதி

ஆழ் வயிற்றில் இரண்டுமே பின் புற்றேதான்

அடிக்கடி வந்த மருந்து ஒதுங்கி எழும்பி மீளும்

கீழ் வயிற்றில் வெளிப்பட்ட உதிரம் சிக்குமே

கிளத்து மல செலவும் சிக்கிப் போகுமே"

( சுறுக்கமான விளக்கம் ) மாதவிடாய் வலி என்ன என்பதை கேளுங்கள்..அந்த நாட்களில் சரியாக உணவு உண்ண முடியாது ஆனால் வாயில் உமிழ் நீர் ஊறிக்கொண்டே இருக்கும். ஹார்மோன் மாற்றம் காரணத்தால் வாந்தி வரும்.. வயிறு ஊதி பெருத்ததுபோல் எண்ணம் தோன்றும், வாயு தொல்லையால் அதன் வலி அடிக்கடி வந்துபோகும், உதிரப்போக்கும், மலசிக்கலும் ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் இயற்கையாக நடக்கும் நிகழ்வு.. இதையும் கடந்து கடுமையான வலிகள் ஏற்படும் பட்சத்தில் மருத்துவரை அனுகி சிகிச்சை பெற வேண்டும். கெட்ட வாயு வயிற்றில் நிறைந்திருந்தாலோ, அல்லது கர்ப்ப பைக்குள் புழுக்கள் இருந்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும் கடுமையான வலி வரலாம். அந்த வலி எதனால் வருகிறது என்பதை தீர ஆராய்ந்து கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

வலியை குறைக்க நாட்டு மருத்துவத்தில் என்ன செய்யலாம்?

  • பெண்கள்‌ பொதுவாக வாழைப்பூவின்‌ உள்ளே இருக்கும்‌ வெண்ணெய்‌ போன்ற குருத்தை சாப்பிட்டு வந்தால்‌ நாளடைவில்‌ வலி நிற்கும்
  • சீரகத்தை பொடி செய்து சாப்பிட்டால்‌ வயிற்றுவலி குறையும்
  • சிறிது வெந்தயத்தை காலையில்‌ வெறும்‌ வயிற்றில்‌ சாப்பிட்டால்‌ வலி குறையும்‌
  • இடுப்புவலிக்கு உளுத்தம்‌ மாவு களி கிண்டி உட்கொண்டால், இடுப்புக்கு சத்து ஏற்பட்டு, வலி நிற்கும்‌
  • நாட்டுக்கோழி முட்டை சாப்பிட்டால்‌ இடுப்புவலி குறையும்‌
  • ஆட்டுக்கால்‌ ரசம்‌, வைத்துச்‌ சாப்பிட்டால்‌ கால்‌ குடைச்சல்‌ தீரும்‌
  • வேப்பிலை கொழுந்துடன் கொஞ்சம் மஞ்சள் சேர்ந்து அம்மியில் அரைத்து மாதவிடாயின்போது காலை வெறும் வயிற்றில் மோருடன் 3 உருண்டைகள் சேர்த்து விழுக்க புழுக்கள் சாகும்
  • வாயுவினால்‌ இந்த நேரங்களில்‌ வலி ஏற்பட்டால்‌ பெருங்காயத்தை சிறிது வெந்நீரில்‌ கலந்து குடித்தால்‌ வலி குறையும்‌
  • அதிக உதிரப்போக்கினால் உடல்‌ களைப்பு அடைந்துவிடும்‌. உடல்‌ களைப்பில்லாமல்‌ இருக்க சத்தான உணவுகளை அன்றாடம் சாப்பிட வேண்டும். அந்த நாட்களில் அதிகம் சாப்பிட வேண்டும்.

இதையும் படிங்க:தெரிந்து கொள்ளுங்கள்: கருவுறுதல் பற்றிய கட்டுக் கதைகளும்... உண்மைகளும்...!

Last Updated : Apr 26, 2024, 3:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details