சென்னை:தூங்கச் செல்வதற்கு முன்னர் நீங்கள் சாப்பிடும் உணவு தான் உங்கள் தூக்கத்தை தீர்மானிக்கிறது என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம். ஒரு கப் டீயை குடித்துவிட்டு அதிகாலை வரை தூங்காமல் இருந்த நாட்களையும் நீங்கள் கடந்து வந்திருக்கலாம்.
இப்படி ஒரு மனிதனுக்கு தூக்கம் எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்தும், உணவு முறையில் கவனம் செலுத்தாமல் தூக்கத்தைக் கெடுத்து கொண்டிருந்தால் நிச்சயமாக நீங்கள் இதனை சீர் செய்ய வேண்டும். உங்கள் தூக்கத்தை எதிர்மறையாக பாதிக்கக்கூடிய உணவுப் பழக்கங்களை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறது அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரத்துறை.
இந்த உணவுகளில் இருந்து விலகி இருங்கள்:இரவில் பிரட், பாஸ்தா போன்ற உணவுகளை சாப்பிடுவதால் செரிமானம் எளிதாக நடந்து நள்ளிரவில் மீண்டும் பசி எடுத்து தூக்கம் பாதிப்படைகிறது. இதற்குப் பதிலாக, அதிக புரதச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
நோ டு ஆல்கஹால்:மது அருந்துவது நல்ல தூக்கத்திற்கு வழிவகுத்தாலும், நாம் அதிகமாக கனவு கானும் நேரமான விரைவான கண் அசைவு தூக்கம் (Rapid Eye Movement- REM) பாதிக்கப்படுவதாகவும், இதனால் நள்ளிரவில் அடிக்கடி முழிப்பு வருவதாகவும் ஆய்வு கூறுகிறது.
டீ, காபி வேண்டாம்:நாள் சுறுசுறுப்பாக செல்ல வேண்டும் அல்லது மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டும் என பகல் நேரத்தில் நீங்கள் குடிக்கும் காபி அல்லது டீ, உங்கள் இரவை சுறுசுறுப்பாக மாற்றிவிடுகிறது. தூங்குவதற்கு 6 மணி நேரத்திற்கு முன் குடிக்கும் காபி, தூக்கத்தை ஊக்குவிக்கும் ஹார்மோனை தடுப்பதாக ஆய்வு கூறுகிறது.
கலோரிகளைக் குறைக்கலாம்: இரவு நேரத்தில் அதிகப்படியான கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கிறது. இதனால் தூங்கும் போது சுவாசப்பாதையில் அழுத்தம் ஏற்பட்டு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது.
டைமிங் முக்கியம்:நேரத்திற்கு சாப்பிடனும் என பலரும் அட்வைஸ் கொடுத்து கேட்டிருப்போம். ஏன், நாம் கூட பலருக்கு இந்த அட்வைஸை கொடுத்திருப்போம். சரியான தூக்கத்திற்கு சரியான நேரத்தில் சாப்பிடுவது அவசியமாக இருக்கிறது. நேரம் கடந்து சாப்பிடுவது சீரற்ற தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. குறிப்பாக, ஆண்களை விட பெண்கள் தான் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
(பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்)
இதையும் படிங்க: ஒல்லியா இருக்கோம்னு கவலை வேண்டாம்.. உடல் எடையை அதிகரிக்க அசத்தலான ஃபுட் டிப்ஸ் இதோ..! - TIPS TO GAIN WEIGHT