ஹைதராபாத்:கார சாரமாக, புளிப்பும் உப்பும் கலந்து நன்றாக ஊறி இருக்கும் ஊறுகாய் என்றால் யாருக்கு தான் பிடிக்காது? மதியம் சாப்பாட்டிற்கும் மட்டுமல்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி என டிபன் ஐட்டங்களுக்கும் ஊறுகாயின் காம்பினேஷன் அட்டகாசமாக தான் இருக்கும். ஊறுகாய் மீது உள்ள காதலால், பலரும் அவர்களது வீட்டில் வகைவகையான ஊறுகாய்களை அடுக்கி வைத்திருப்பார்கள்.
பலரும் ஊறுகாய் போடுவதில் ஸ்பெஷலிஸ்டாகவும் இருப்பார்கள். வருடக்கணக்கில் ஊறுகாய்களை சேமித்து வைத்து தினமும் பயன்படுத்துவார்கள். ஆனால், மழைக்காலத்திடம் இருந்து அவற்றை பாதுகாப்பாக வைப்பது மிகப்பெரிய சவால் தான். காரணம், ஈரப்பதம் காரணமாக ஊறுகாய் மீது வெள்ளை நிறத்தில் பூஞ்சை படர்கிறது(Mold in pickles).
இதை தவிர்ப்பது என்பது பெரும் சவால் என்றாலும், சில மாற்றங்களை கொண்டு வருவதால் ஊறுகாயை மழைக்காலத்திலும் பத்திரமாக வைத்திருக்க முடியும். அந்தக் குறிப்புகள் என்ன என்பதை இந்தக் தொகுப்பில் பார்க்கலாம்.
கண்ணாடி ஜாடிகள் தான் பெஸ்ட்: ஊறுகாய் நீண்ட காலத்திற்கு சுவையாகவும் கெடாமலும் இருக்க முதலில் செய்ய வேண்டியது, அவற்றை முறையாக சேமித்து வைப்பது தான். அதற்கு, எப்போதும் காற்று புகாத கண்ணாடி அல்லது பீங்கான் ஜாடிகளை பயன்படுத்தவும். முக்கியமாக, பிளாஸ்டிக் டப்பாக்களில் ஊறுகாயை சேமித்து வைக்க கூடாது.
ஜாடிகள் சுத்தமாக இருக்க வேண்டும்: ஊறுகாயை வைப்பதற்கு நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள ஜாடியை சுத்தமாக துடைத்திருப்பது மிகவும் அவசியம். ஜாடியை கழுவி ஈரப்பதம் இல்லாத வரை காய வைக்கவும். நன்றாக ஜாடி உலர்ந்த பின்னர், ஊறுகாயை சேமித்து வைக்கலாம்.