கோயம்புத்தூர்: கோவை அரசு மருத்துவமனையின் இதயவியல் துறையில், தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் முதல் முறையாக CRT-D எனப்படும் அதிநவீன பேஸ்மேக்கர் சிகிச்சை செய்து மருத்துவர்கள் நோயாளி ஒருவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா, "இதயவியல் துறையில் தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் முதல் முறையாக CRT-D எனப்படும் கார்டியாக் ரீசின்க்ரோனைசேஷன் தெரபி டிஃபிபிரிலேட்டர் கருவி (Cardiac Resynchronization Therapy Defibrillator) இதய நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
![சிகிச்சை பெற்றவருடன் மருத்துவர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/06-02-2025/23484273_aa.jpg)
அதாவது, கோவை அரசு மருத்துவமனையில் திருப்பூரைச் சேர்ந்த சரவணகுமார் (வயது 54) என்பவர் வென்ட்ரிகுலர் டாக்கிகார்டியா (ventricular tachycardia) எனப்படும் சீரற்ற இதயத்துடிப்பு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு உடனடியாக ஷாக் ட்ரீட்மென்ட் (Cardiac defibrillation) கொடுத்து அவருடைய உயிரைக் காப்பாற்றினர்.
மேலும், அவருடைய நோய்க்கான காரணத்தை ஆராய்ந்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இதுபோன்ற சீரற்ற இதயத்துடிப்புடன் பல முறை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்தனர். இதன் விளைவாக அவருக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டுள்ளதையும் மருத்துவர்கள் கண்டறிந்தனர். இந்த சீரற்ற இதயதுடிப்பை சரிசெய்ய மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே அவருக்கு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதயமுடுக்கி (PACEMAKER) கருவி பொருத்தப்பட்டது.
இதையும் படிங்க: "புற்றுநோயை அறிவிக்கப்பட்ட நோயாக வகைப்படுத்த வேண்டும்" மத்திய அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை!
இவ்வாறு இதயமுடுக்கி கருவி பொருத்தப்பட்ட பின்னரும், சீரற்ற இதயத்துடிப்பு மற்றும் இதய செயலிழப்போடு அவதிப்பட்டு வந்த அவருக்கு CRT-D எனப்படும் அதி நவீன கருவியைப் பொறுத்த இதவியல் துறை மருத்துவர்கள் முடிவெடுத்தனர். இதன்படி இவருக்கு ஜனவரி 24 ஆம் தேதியன்று CRT-D கருவி வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.
தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை செய்ய 10 லட்சம் ரூபாய் வரை செலவாகும் நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் நோயாளிக்கு இலவசமாக சிகிச்சை வழங்கப்பட்டது" என்று தெரிவித்தார். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களின் இந்த சேவையை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.