சென்னை: கொசு கடிப்பதன் காரணத்தால் வரும் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் சிக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கிய ரீதியாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளும் சூழல் உருவாகி உள்ளதாக மருத்துவ ஆய்வு குறிப்பிடுகிறது. அதிலும் குறிப்பாக, அப்படி பிறக்கும் குழந்தைகளின் எடை மிக குறைவாக இருப்பதன் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இது தொடர்பான ஆய்வு பிரேசில் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அமெரிக்கன் எக்னோமிக் ஜேர்னல் (American Economic Journal) அதன் கட்டுரையை வெளியிட்டுள்ளது.
அதில், ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது அவருக்கு வரும் நோய்கள் பொதுவாக குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் டெங்கு வைரசை பரப்பும் கொசுக்களின் தாக்கத்திற்கு ஆளாகும் பெண்கள், டெங்குவால் பாதிக்கப்பட்ட பிறகு அதனால் ஏற்படும் பின் விளைவுகள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெங்கு பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு பிறக்கும் குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறக்கின்றனர் எனவும் அது 67 சதவீதத்தில் இருந்து 133 சதவீதமாக அதிகரித்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கர்ப்ப காலத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள் முதல் மூன்று ஆண்டுகளுக்கு அடிக்கடி நோய் வாய்ப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நிலை 27 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் அந்த ஆய்வு கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது பிரேசில் நாட்டு கர்ப்பிணிகளுக்கு மட்டும் அல்ல பொதுவாக உலகம் முழுவதும் டெங்குவால் பாதிக்கப்படும் அனைத்து தாய் மற்றும் சேய்க்கு பொருந்தும் நிலையில், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் பொருளாதார உதவி பேராசிரியர் லிவியா மெனெஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், பொருளாதாரம் மற்றும் சுற்று சூழல் பாதிப்புகள் என்பது சாதாரண மக்களின் வாழ்க்கையிலும், ஆரோக்கியத்திலும், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக்கூறியுள்ள, சர்ரே பல்கலைக்கழகத்தின் பொருளாதார இணை பேராசிரியர் மார்ட்டின் ஃபோரக்ஸ் கோப்பென்ஸ்டைனர், இந்த விவகாரத்தில் அரசாங்கங்கள் மற்றும் சுகாதார அமைப்புகள் போதிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க:மாதவிடாயின்போது ஏன் கடுமையான வலி மற்றும் மன உளைச்சல் ஏற்படுகிறது? காரணம்.. தீர்வு..! - How To Control Menstrual Cramps