சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை துணை இயக்குநர், தேசிய நலவாழ்வு குழுமம் மற்றும் டைப் 1 நீரிழிவு நோய் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நீரழிவு நோய்க்கான விழிப்புணர்வு கையேட்டினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
அதன் பின்னர், ஒப்பந்தம் தொடர்பான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதில், முதல்வகை நீரிழிவு நோய்க்கு இணையதள பதிவேடு தொடங்குவதுடன், தொடர்ச்சியாக பதிவேட்டில் இடம் பெற்றிருக்கின்ற அனைவருக்குமே நீரிழிவு நோய் நோயற்ற வாழ்வு முறை மற்றும் சிகிச்சை குறித்து சேவை தரப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, டைப் -1 நீரழிவு நோய்க்கான இணைய பதிவேட்டினை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “இந்தியாவிலேயே முதன்முறையாக மாநில அளவிலான டைப் 1 நீரழிவு நோய்க்கான இணைய பதிவேட்டை தொடங்கி, அதன் மூலம் நடவடிக்கை எடுப்பது தமிழ்நாடு தான்.
இந்த டைப் 1 நீரிழிவு நோய் என்பது பெரும்பாலும் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர் மற்றும் இளம் வயதினர் மத்தியில் அதிக பாதிப்பை ஏற்படுத்த கூடியதாக இருக்கிறது. ஆனால் அவை அறியப்படாமல் வயது அதிகரித்த பின் கண்டறியப்படுகின்றனர். இந்த இணையதள பதிவேட்டின் மூலம் பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணிக்க முடியும்.
மேலும் இந்த டைப் -1 நீரழிவு நோய் என்பது உடலில் இன்சுலின் உற்பத்தியைக் குறைக்கிறது. இதனால் கணையம் பாதிக்கப்படுகிறது. இந்த இன்சுலின் என்பது ரத்தத்தின் சர்க்கரை நோய் அளவை பராமரிப்பதில் பெரும்பங்காற்றும் நிலையில், டைப் 1 நீரழிவு நோயால் பாதிக்கப்படுபவர்கள் இன்சுலின் சிகிச்சையை சரியான முறையில் எடுக்காவிட்டால் தீவிர பாதிப்புகளை உருவாக்குகிறது.
இதில் முதன்மையாக சிறுநீரகங்கள், நரம்புகள், கண்கள் போன்ற உறுப்புகள் அதிக பாதிப்படைகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, டைப் 1 நீரிழிவு நோயுடன் வாழ்பவர்களின் எண்ணிக்கை 8,60,423 என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் அதிகப்படியான பாதிப்பாளர்கள் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர்களாக இருக்கின்றனர்.