தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Health Team

Published : Aug 28, 2024, 5:30 PM IST

ETV Bharat / health

மூன்றாவது குழந்தை பெற்றால் ரூ.51 ஆயிரம் சன்மானம்..மக்கள் தொகையை அதிகரிக்க புது முயற்சி! - Maheshwari Samaj Announcement

Maheshwari Samaj Announcement: மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகம், மூன்றாவதாக குழந்தை பெற்றால் கணவன் மனைவிக்கு ரூ.51 ஆயிரம் சன்மானம் தருவதாக அறிவித்துள்ளது. இது பற்றிய முழு விவரங்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETV Bharat Health Team)

போபால் (மத்திய பிரதேசம்):ஒரு புறம், நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த 'நாம் இருவர், நமக்கு இருவர்' என்பதை அரசு வலியுறுத்தி வரும் நிலையில் மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூகம் மூன்று குழந்தைகளை பெற்றெடுப்பவர்களுக்கு சன்மானம் அறிவித்துள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

தேசிய அளவில் மகேஸ்வரி சமூகத்தினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, மகேஸ்வரி சமூகத்தை சேர்ந்த குடும்பத்தில் மூன்றாவதாக குழந்தை பிறந்தால், மகேஸ்வரி சங்கம் சார்பில் ரூ. 51 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை குறைவால் நடவடிக்கை: அகில இந்திய மகேஸ்வரி சங்கத்தின் மாநாடு சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம், கிஷன்கரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், மகேஸ்வரி சமூகத்தினரின் மக்கள் தொகை குறைந்து வருவது குறித்து விவாதிக்கப்பட்டது. இது தொடர்பான, ஆய்வறிக்கையும் அம்மாநாட்டில் சமர்பித்தனர்.

அதில், நாட்டில் உள்ள மகேஸ்வரி சமூகத்தை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு மகேஸ்வரி சமூகத்தினர் 12 லட்சத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில், தற்போது 8 லட்சம் பேர் மட்டுமே இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தை பூர்வீகமாக கொண்டுள்ள மகேஸ்வரி சமூகத்தின் மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக, மூன்று குழந்தைகளை பெற்றெடுக்கும் கணவன் மனைவிக்கு ரூ.51 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மூன்று குழந்தை பெற்றால் சிறப்பு மரியாதை: "மூன்றாவதாக குழந்தையை பெற்றெடுக்கும் பெற்றோர்கள் சமுதாய நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகக் அழைத்து கெளரவிக்கப்படுவார்கள்" என்றார் மகேஸ்வரி சமாஜ் மகளிர் பிரிவு செயலாளர் ரிது மகேஸ்வரி.

அதனை தொடர்ந்து அவர் பேசுகையில், "கிஷன்கரில் நடந்த மாநாட்டில், மூன்றாவது குழந்தை பிறந்தால், 51 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று குழந்தைகளை பெற்றெடுக்கும் பெற்றோர்கள் சமுதாய நிகழ்ச்சியில் விளக்கு ஏற்றுவதில் முன்னனி வகிப்பார்கள்" என்றார்.

FD-யாக பதிவு செய்யப்படும்:"மூன்றாவது குழந்தை பிறக்கும் போது, ரூ.51 ஆயிரம் ரொக்க தொகையாக வழங்கப்படாது. மாறாக, மூன்றாவது குழந்தையின் பெயரில் ரூ.51 ஆயிரம் எஃப் டி(FD)-ஆக பதிவு செய்யப்படும். குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு பின், பணமாக எடுத்துக்கொள்ளலாம்" என்றார்.

"அந்த காலத்தில், மகேஸ்வரி சமூகத்தில் இருந்த கணவன் மனைவிகள் 3 முதல் 4 குழந்தைகளை பெற்றுக்கொண்டனர். ஆனால், இப்போது ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டும் போது என்ற போக்கு குடும்பங்களில் அதிகரித்துள்ளது. மேலும், சமூகத்தின் மக்கள் தொகை குறைவதற்கு மற்றொரு முக்கிய காரணம், நவீன வாழ்க்கை முறையும், கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வது தான்" என்றார்.

அகில இந்திய மகேஸ்வரி சமூக பணிக்குழு உறுப்பினர் ரமேஷ் மகேஸ்வரி கூறுகையில், "மகேஸ்வரி சமூக மக்கள் சேவையில் ஆர்வம் கொண்டவர்கள். மகேஸ்வரி சங்கம், நாட்டின் புனிதத் தலங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் பல தர்மசாலைகளை கட்டியதோடு, பிற மதப் பணிகளையும் நடத்தி வருகிறது. இப்படியான நிலையில், மதத்திற்காக மகேஸ்வரி சமூக மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:

ஓரினச் சேர்க்கையாளர்களை அதிகம் பாதிக்கும் குரங்கம்மை? - மருத்துவர்கள் எச்சரிப்பது ஏன்?

பெண்ணின் மூளையில் இருந்த கட்டி..கண்ணிமை வழியாக அகற்றி சாதனை படைத்த ஐதராபாத் மருத்துவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details