தேசிய ஊட்டச்சத்து வாரம் கடைபிடிப்பதற்கு காரணம் என்ன? இந்த நாளில் அதன் முக்கியத்துவத்தை தெரிந்துகொள்ளுங்கள்! - National Nutrition Week 2024
National Nutrition Week 2024: உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் தேசிய ஊட்டச்சத்து வாரம் என்றால் என்ன? இதை கடைப்பிடிப்பதால் நடக்கும் மாற்றங்கள் என்ன? இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.
ஹைதராபாத்:சீரான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தை மேம்படுத்துவதற்காகவும், மக்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1 முதல் 7ம் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து வாரம் கொண்டாடப்படுகிறது.
தேசிய ஊட்டச்சத்து வாரத்தின் வரலாறு: தேசிய ஊட்டச்சத்து வாரம் முதன்முதலில் அமெரிக்காவில் மார்ச் 1973ல் அமெரிக்க உணவுமுறை சங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி மக்களுக்குக் கற்பிப்பதும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடிக்க ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும்.
அதன் வெற்றியின் காரணமாக இந்த முயற்சி பிரபலமடைந்து, இந்தியா உட்பட பல நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் இந்த தினம் கொண்டாடப்பட்டது. 1982ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் வாரத்தில் இந்திய அரசின் உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியத்தால் தேசிய ஊட்டச்சத்து வாரம் கடைப்பிடிக்கப்பட்டது.
6 அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் என்ன?: உடல் வலிமையாக, ஆரோக்கியமாக இருக்க வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள், கொழுப்புகள், நீர் மற்றும் கார்போஹைட்ரேட் இன்றியமையாததாக இருக்கிறது. உடல் சரியாக செயல்பட மக்கள் இந்த ஊட்டச்சத்துக்களை உண்ணும் உணவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை நுண்ணூட்டச்சத்துக்கள், மேக்ரோநியூட்ரியண்ட்ஸ் என இரண்டு வகைகளாக பிரிக்கின்றன.
நுண்ணூட்டச்சத்துக்கள்: Micro nutrients என்பது ஒரு மனிதனுக்கு சிறய அளவில் தேவைப்படும் வைட்டமின் மற்றும் தாதுக்களாக இருக்கிறது. இதன் பயன்பாடு உடலுக்கு சிறிய அளவிலேயே தேவைப்பட்டாலும் அவற்றின் குறைபாடு உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.
மேக்ரோநியூட்ரியண்ட்ஸ்: நீர், புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு என மனிதன் சுறுசுறுப்பாக இயங்க அதிக அளவில் தேவைப்படும் ஊட்டச்சத்துகள் தான் மேக்ரோநியூட்ரியண்ட்ஸ்.
ஊட்டச்சத்து ஏன் முக்கியம்?: அறிவியல் ரீதியாக உயிரினங்கள் ஊட்டச்சத்து, உயிர்வேதியியல் மற்றும் உடலியல் செயல்முறைகள் மூலம் உயிர்வாழ்கின்றன. நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்து நமது மூளை, உடலமைப்பு மற்றும் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில், ஊட்டச்சத்தை உட்கொள்வது நோய்க்கு எதிரான நமது பாதுகாப்பை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் மாறுபட்ட உணவை உண்ணும் போது, நோயெதிர்ப்பு அமைப்பை சிறந்த முறையில் செயல்படுவதையும் உறுதிசெய்கிறது.
இந்தியாவில் ஊட்டச்சத்து நிலை: இன்றும் கூட இந்தியா போன்ற ஒரு நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு ஒரு முக்கிய பிரச்சனையாக தான் உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) சமீபத்திய ஆய்வின்படி, மராஸ்மஸ், கெரடோமலாசியா போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகளால் ஏற்படும் நோய்கள் பெரும்பாலும் மறைந்துவிட்டன, இருப்பினும் மக்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகை பொது சுகாதார பிரச்சனைகளாக நீடிக்கின்றன.
இந்தியாவில் ஏற்படும் 56.4 சதவீதம் நோய்களுக்கு ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் தான் காரணம் என ஆய்வு கூறுகிறது. ஆரோக்கியமான உணவு மற்றும் உடல் செயல்பாடு கரோனரி இதய நோய் (CHD) மற்றும் உயர் இரத்த அழுத்தம் (HTN) ஆகியவற்றை கணிசமாகக் குறைக்கலாம் மற்றும் டைப் 2 நீரிழிவு நோயை 80% வரை தடுக்கிறது.
சமீபத்தில், இந்தியர்களுக்கு கால்சியம், இரும்புச்சத்து குறைபாடு உள்ளதாக தி லேன்சட் குளோபல் ஜெல்த் ஜர்னல் அதிர்ச்சி தகவலை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதால் குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியைத் தடுத்து பல்வேறு நோய்களுக்கு அவர்களை ஆளாக்குகிறது. ஊட்டச்சத்துக்களை உட்கொள்வது என்பது உடல்,மன மற்றும் சமூக ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாக அமைகிறது.