சென்னை:மக்கள் தங்கள் உடலின் பாகங்களான முகம் மற்றும் கைகளை தங்களின் சொந்த பகுதிகளைப் போலவே கவனித்துக் கொள்கிறார்கள். ஆனால் பாதங்களை பெரும்பாலும் புறக்கணித்து விடுகிறார்கள் என்று பாத மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். தினமும் காலை மற்றும் இரவு என இரு வேளையும் பல் துலக்குவதைப் போல தினமும் இரு வேளை, அதாவது தூங்குவதற்கு முன் பாதங்களை கழுவுவது நல்ல தூக்கத்தையும், தொற்று நோய்களில் இருந்து விடுபட உதவும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பாதங்களை ஏன் கழுவ வேண்டும்:பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்லக்கூடியவர்கள் நாள்தோறும் வெளியில் செல்வதால், வெளியில் உள்ள தூசு, குப்பை, பாக்டீரியா உள்ளிட்ட நுண்கிருமிகள் பாதங்களில் ஒட்டிக்கொள்ளும். நான் தான் சாக்ஸ் போட்டுக்கொள்கிறேனே, எனது பாதங்களில் எந்த நுண்கிருமிகளும் ஒட்டிக்கொள்ளாது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. சாக்ஸ் போட்டிருப்பதால் பாதங்களில் நாள் முழுவதும் ஏற்படும் வேர்வை, ஈரப்பதம் குவிந்து பாக்டீரியா தொற்று ஏற்படும்.
பாக்டீரியா தொற்றினால் சேற்றுப்புண் போன்ற பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படும். சேற்றுப்புண்ணால் கால் விரல்களுக்கிடையில் ஏற்படும் விரிசல் மற்றும் பிளவுகள் வழியாக பாக்டீரியாக்கள் நுழைந்து பரவி, மூட்டுகளையும் பாதிக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.